பள்ளிகள் திறப்பு எப்போது? 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா..எய்ம்ஸ் இயக்குநர் பளிச்
டெல்லி: இந்தியாவில் சிறார்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால், படிப்படியாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து சீக்கிரம் முடிவு செய்ய வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தான் கடந்த 1.5 ஆண்டுகளாக இந்தியாவைப் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் கொரோனா குறைந்த சமயத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பள்ளிகள்
இருப்பினும், 2ஆம் அலையில் கொரோனா கேஸ்கள் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு எப்போது என கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் சிறார்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால், படிப்படியாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து சீக்கிரம் முடிவு செய்ய வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

படிப்படியாகத் திறக்கலாம்
இது குறித்து ரன்தீப் குலேரியா கூறுகையில், "கொரோனா கேஸ்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க தொடங்கலாம் என்பதே எனது கருத்து. முதலில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழ் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளைத் திறக்க வேண்டும். பள்ளிகள் திறப்பு காரணமாக கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பள்ளிகளை மூடிவிடலாம்.

பள்ளிப் படிப்பு முக்கியமானது
அதேநேரம் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டும். இந்த முறை இல்லையென்றால் வேறு முறைகளை பயன்படுத்தியாவது பள்ளிகளை படிப்படியாகத் திறக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு வழக்கமான ஒரு வாழ்க்கையை நம்மால் அளிக்க முடியும். இது மட்டுமில்லை ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப் படிப்பு முக்கியமானது. எனவே அதை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் கல்வி
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில் கற்பிக்கும் முறையால் டிஜிட்டல் டிவைட் ஏற்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் தொழில்நுட்பம் முறையாகச் சென்று சேராத இடங்களில் வசிக்கும் சிறார்களுக்கு இது பாகுபாடாக அமைந்துள்ளது என யுனிசெப் குறிப்பிட்டுள்ளது. இதற்காகத் தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து நாம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறுகிறேன்.

நோயெதிர்ப்பு சக்தி
இந்தியாவில் குழந்தைகள் அதிகளவில் வைரசை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் பெரும்பாலான சிறார்கள் மத்தியில் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகவே உள்ளது. எய்ம்ஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் நாட்டில் உள்ள இளைஞர்களைக் காட்டிலும் சிறார்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆம் அலை
எனவே, அடுத்து வரும் கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என உறுதியாகக் கூற எவ்வித ஆதாரமும் இல்லை. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை சரியாகப் பின்பற்றுவதன் மூலம் பள்ளிகளைத் திறக்கும் பணியைத் தொடங்கலாம். ஏனென்றால், பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டு இருப்பது குழந்தைகளை மன ரீதியாக அதிகம் பாதிக்கிறது" என்றார்.

சிறார்களுக்கு வேக்சின்
பாரத் பயோடெக் நிறுவனம் 2-17 வயதுடைய சிறார்கள் மத்தியில் நடத்தும் கோவாக்சின் சோதனையின் முதல்கட்ட முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையிலேயே இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications