மூச்சு திணறும் டெல்லி! மீண்டும் தலைதூக்கும் காற்று மாசு பிரச்னை.. மக்கள் கடும் அவதி
டெல்லி: டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது. மழை பெய்தால் மட்டுமே மாசு குறையும் என்று இருக்கும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் மழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் தற்போது 300ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் காற்றின் பாதுகாப்பான தரத்தை விட 7 முதல் 8 மடங்கு காற்று மாசு அதிகரித்திருக்கிறது. இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், "டெல்லியில் இன்று காலை 7 மணி நிலவரப்படி காற்று மாசு 316 ஆக பதிவாகியுள்ளது. இந்த காற்று சுவாசிக்க ஏற்கத்தக்கதல்ல" என்று கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் காற்றின் தரம் 400ஐ தாண்டியிருந்தது. இருப்பினும் கடந்த 3ம் தேதி மழை பெய்த நிலையில் மாசு ஓரளவு குறைந்தது.
தற்போது இது மீண்டும் அதிகரித்திருக்கிறது. ஜஹாங்கிர்புரியில் 334, லோதி சாலையில் 224, விவேக் விஹாரில் 373ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. மறுபுறம் கடும் குளிரில் டெல்லி நடுங்கிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் குறைந்தபட்சம் 9.4 டிகிரி செல்சியஸும் அதிகபட்சமாக 25.7 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகியுள்ளது. டிசம்பர் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்லை என்பதால், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக இந்த காலங்களில், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படும். எனவே இதன் காரணமாகவும் காற்று மாசு அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது. இருப்பினும் மாசு குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications