உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள்.. 41 பேரின் உடல்நிலை எப்படி உள்ளது? எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 41 பேரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சோதனையின் முடிவுகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி - யமுனோத்ரி இடையே சார்தாம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சில்க்யாரா - தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சுரங்க பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி அதிகாலை சுரங்கத்தின் முகப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டன. இதனால், அப்போது சுரங்கத்திற்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனால், தொழிலாளர்களை மீட்க முழு வீச்சில் மீட்புக்குழுவினர் இறங்கினர்.
17 நாள் போராட்டம்: தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்பட பல்வேறு மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சர்வதேச நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நீடித்தது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீட்பு பணியில் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக கடந்த 28 ஆம் தேதி தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் 41 தொழிலாளர்களுக்கு மனநல மற்றும் உடல் நல பரிசோதனைகள் நடைபெற்றன. எக்ஸ் ரே, இசிஜி என அடிப்படை பரிசோதனைகளுடன் அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்றது. இதில், தொழிலாளர்களின் உடல் நிலை நலமாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரே ஒரு தொழிலாளி: இதையடுத்து அனைத்து தொழிலாளர்களும் வீடுகளுக்கு திரும்பலாம் என்றும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக ரிஷ்கேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ரவிகாந்த் கூறியதாவது:- தொழிலாளர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, இசிஜி என அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் அனைத்து நார்மல் ஆகவே உள்ளது. உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் அவர்கள் சீராக உள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பலாம். எனினும், ஒரே ஒரு தொழிலாளிக்கு மட்டும் பிறவியிலேயே ஏற்பட்ட இருதய பாதிப்பு பிரச்சினை இருப்பதால் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். சுரங்க விபத்துக்கும் இவரது உடல் நல பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
இது தான் காரணம்: மேலும், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனால், பட்டினி கிடக்கும் நிலை ஏற்படவில்லை. தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினராக இருந்தனர். தொழிலாளர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என்றார்.












Click it and Unblock the Notifications