ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்து? அலகாபாத் ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. புதிய சிக்கல்?
லக்னோ: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 'இரட்டை குடியுரிமை' இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையை உத்தரப் பிரதேச அரசே நேரடியாக நடத்தலாம் அல்லது ஏதேனும் மத்திய விசாரணை முகமைக்கு மாற்றி உத்தரவிடலாம் என்றும் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
ராகுல் காந்திக்கு இந்தியக் குடியுரிமை உடன் பிரிட்டன் குடியுரிமையும் இருப்பதாகச் சொல்லி, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான எஸ் விக்னேஷ் சிஷிர் வழக்கு தொடர்ந்தார். இந்திய சட்டப்படி இரட்டை குடியுரிமை ஒருவர் வைத்திருக்க முடியாது என்றும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடர்ந்தார்.

பாஜக நிர்வாகி வழக்கு
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான எஸ்.விக்னேஷ் சிஷிர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தங்களுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி லக்னோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தான் நீதிபதிகள் இந்த கருத்துகளைக் கூறியுள்ளனர்..
திடுக் தகவல்கள்
மனுதாரர் விக்னேஷ் சிஷிர் தனது புகாரில் ராகுல் காந்தி குறித்துப் பல திடுக்கிடும் தகவல்களை முன்வைத்துள்ளார்.. ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் மெயில் தன்னிடம் இருப்பதாக அவர் வாதிடுகிறார். ஒரு வெளிநாட்டுக் குடிமகனாக இருந்துகொண்டு, இந்தியாவில் தேர்தலில் போட்டியிடவும், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கவும் அவருக்குத் தகுதி இல்லை என்பது மனுதாரரின் முக்கியக் குற்றச்சாட்டு.
புயலைக் கிளப்பிய வழக்கு
எனவே, பாரதிய நியாய சன்ஹிதா, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலில் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கடந்த டிசம்பர் 17ம் தேதி அன்று உயர் நீதிமன்றத்தால் லக்னோவிற்கு மாற்றப்பட்டது. இப்போது உயர் நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் மீண்டும் தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அடுத்து என்ன
ராகுல் காந்திக்கு இந்த குடியுரிமை வழக்கு இப்போது ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. விசாரணையை யார் நடத்தப் போகிறார்கள்.. இதில் அடுத்து என்ன நடக்கும் என்பவை மிகப் பெரிய கேள்விகளாக எழுந்துள்ளது. இது அவரது எம்பி பதவிக்கே உலை வைக்கும் அளவுக்குத் தீவிரமானது. இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருந்தாலும், நீதிமன்றத்தின் தலையீடு இதனைச் சட்டப்பூர்வமான ஒரு சிக்கலாக மாற்றியுள்ளது.














Click it and Unblock the Notifications