அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்தினால் முஸ்லீம்கள் பலதார மணம் செய்வது தவறு இல்லை: அலகாபாத் நீதிமன்றம்
அலகாபாத்: அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்தினால் முஸ்லீம்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்ளலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக புர்கான் என்பவர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
அனைத்து மனைவிகளையும் ஒரே மாதிரியாக நடத்தினால் முஸ்லீம்கள் பலதார திருமணம் செய்து கொள்ளலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக புகார் அளித்து இருந்தார். தனது கணவரான புர்கான் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.

பல தார திருமணம்
இந்த புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் புர்கான் மற்றும் அவருடன் தொடர்புடைய இருவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதை எதிர்த்து புர்கான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தனி நீதிபதி அருண் குமார் சிங் தேஸ்வால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்தார். நீதிபதி கூறியதாவது:-
குர் ஆனில் பல தார திருமணம் நியாயமான காரணத்திற்காக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இது அடிக்கடி சுயநலகாரணங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. "இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவு மத சுதந்திரத்தை வழங்குவதையும், பின்பற்றுவதையும், பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்கிறது. இதில் மத நம்பிக்கையின் படி தனிநபரின் வெளிப்புற செயல்களும் அடங்கும்.
நான்கு மனைவிகள் வரை
ஆனால், இந்த உரிமை பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பின் பகுதி-III இன் பிற விதிகளுக்கு உட்பட்டது ஆகும். வரலாற்றில் அரபியேர்களின் பழங்குடி மோதல் கால கட்டத்தில் பெரிய எண்ணிக்கையில் பெண்கள் விதவைகளாக இருந்தனர். குழந்தைகள் அனாதைகளாகவும் இருந்தனர். முஸ்லீம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
மதினாவில் வளர்ச்சி அடைந்து கொண்டு இருந்த சமூகத்தை பாதுக்காக்க இஸ்லாமியர்கள் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தனர். அத்தகைய ஒரு சூழலில், பலதார திருமணத்தை குரான் அனுமதித்தது" என்று கூறினார். முன்னதாக புர்கான் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ள இஸ்லாமிய சட்டம் அனுமதி அளிக்கிறது என வாதிட்டார்.
இதையடுத்து இந்த திருமணம் செல்லும் என்பதால், பலாத்காரம் என்பது இதில் பொருந்தாது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளேன். அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுக்கக் கூடாது" என்று கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications