சொந்த காசு போட்டு.. 30 வருஷமா காங்.க்கு உழைச்சேனே! சீறும் அமெரிக்கை நாராயணன்.. என்ன நடந்தது?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகி அமெரிக்கை நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 7 எம்எல்ஏக்கள் பலத்தில் இருந்து 2 எம்எல்ஏக்கள் என்ற பலத்திற்கு சுருங்கிவிட்டது.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு இருந்தார். பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மோசம்
உத்தரகாண்டிலும் இதே நிலைதான். அங்கு மூன்று முறை பாஜக முதல்வரை மாற்றியும், அங்கு ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியும் அதை வாக்குகளாக மாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. கோவாவில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துள்ளது. அதேபோல் மணிப்பூரிலும் காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பஞ்சாப்பில் கைவசம் இருந்த ஆட்சியையும் உட்கட்சி மோதலால் காங்கிரஸ் இழந்துள்ளது.

நீக்கம்
இதனால் காங்கிரஸ் தலைமை மீது இதனால் பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் ஜி 23 தலைவர்கள் எனப்படும் மூத்த தலைவர்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரசின் தோல்வி குறித்த விவாதம் நடத்துவதற்காக இவர்கள் கூடினார்கள். இந்த நிலையில்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பேசினார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியில் இருந்து நேரு குடும்பத்தினர் விலக வேண்டும். அவர்களின் தலைமை சரி இல்லை என்று அவர் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது அமெரிக்கை நாராயணன் மெது காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கேஎஸ் அழகிரி நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

நடவடிக்கை
காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் இனி அவர் பங்கேற்க கூடாது. அவர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறி கே.எஸ் அழகிரி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் தன்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு அமெரிக்கை நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக பேசியது என்ன? தலைவர் அழகிரி விளக்கம் கேட்க வேண்டும்? கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் #காங்கிரசை காப்பாற்றுவோம் என்றே!, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications