திமுக உண்ணாவிரதத்துக்கு நடுவே.. நாளை டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி! பரபர பின்னணி
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி நாளை காலை டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு அவர் சில முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், மாநிலத்தை ஆட்சி செய்யும் திமுகவுக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது அந்த மசோதா ஜனாதிபதி திரெளபதி முர்மு முன் உள்ளது. அதில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் கடந்த 12ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம்.
நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்'' என தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு தமிழ்நாட்டில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இதன் தொடர்ச்சியாக மறுநாள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்த ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதோடு ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பல கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க நீட் தேர்வை கண்டித்தும், ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாட்டு மற்றும் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் 20ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஆளுநர் ஆர்என் ரவி நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி சில முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் யாரை சந்திக்கிறார்? அந்த சந்திப்புகளின் பின்னணி குறித்த தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் ஆர்என் ரவி மற்றும் நீட் தேர்வை எதிர்த்து திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அவரது இந்த டெல்லி பயணம் என்பது அதிக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications