டிரம்புக்கு ‛செக்’.. ஜி ஜின்பிங் எழுதிய ரகசிய கடிதம்.. இந்தியா - சீனாவின் பிளான் என்ன? அலறும் அமெரிக்கா
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். மறுபுறம் அமெரிக்காவின் எதிரியாக சீனா இருந்தாலும் கூட தற்போது கொஞ்சம் அந்த நாட்டுக்கு டிரம்ப் கரிசனம் காட்டி உள்ளார். இதற்கிடையே தான் டிரம்பை எதிர்க்க பகையை மறந்து இந்தியா - சீனா இடையேயான உறவு வலுவடைய தொடங்கி உள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ரகசிய கடிதம் வந்து இருப்பதும், அந்த கடிதத்துக்கு பிறகு தான் இநு்தியா - சீனா உறவு வலுவடைய தொடங்கி உள்ளது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த ரகசிய கடிதம் எப்போது வந்தது? கடிதத்தின் சாராம்சம் என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகப்பட்சமாக வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்காவுக்கான ஏற்றுமதியை சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. நம்முடன் அமெரிக்காவுக்கு இருக்கும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்டவற்றை காரணம் காட்டி டிரம்ப் நம் நாட்டுக்கு இந்த வரிகளை தீட்டி உள்ளார். இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதேபோல் அண்டை நாடான சீனாவையும் டிரம்ப் விடவில்லை. அதிபரானதுமே சீனாவை குறிவைத்து தொடர்ந்து வரிகளை விதித்தார். மொத்தம் 145 சதவீதம் வரை சீனாவுக்கு, டிரம்ப் வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும், 135 சதவீத வரியை அமெரிக்காவுக்கு விதித்தது. இதையடுத்து இருநாடுகளுக்கு நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. தற்போது சீனாவுக்கு 30 சதவீத வரி மட்டும் டிரம்ப் அமல்படுத்தி உள்ளார். மற்ற வரிகளை நிறுத்தி வைத்துள்ளார்.
மேலும் தற்போது சீனா மாணவர்கள் அமெரிக்காவில் பயில்வது உள்ளிட்ட சில சலுகைகளை டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் டிரம்பை நம்ப முடியாது. எப்போது, எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்பது புரியாத புதிராக தான் இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் டிரம்ப் சீனாவுக்கான வரியை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை சீனாவும் உணர்ந்துள்ளது. அதேபோல் இனி டிரம்பை நம்பி பலனில்லை என்று இந்தியாவும் சீனாவின் பக்கம் திரும்பி உள்ளது. அதேபோல் சீனாவும், நம் நாட்டை அரவணைக்க தொடங்கி உள்ளது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மீண்டும் நெருங்கி வர தொடங்கியுள்ளன. அமெரிக்கா இந்தியா மீது தொடுத்துள்ள வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்ற செயல் என்று சீனா விமர்சனம் செய்துள்ளது. மேலும் கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களில் மோதி கொண்டனர். இருநாடுகளுக்கும் உயிர் பலி ஏற்பட்டது. இதையடுத்து இருநாடுகள் உறவில் ஏற்பட்ட விரிசல் தற்போது டிரம்பால் சரியாக தொடங்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பற்றி பேசப்பட்டது.
அதேபோல் பிரதமர் மோடி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சீனா செல்ல உள்ளார். சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அங்கு செல்ல உள்ளார். இது இந்தியா - சீனா உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. இப்படியான சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் நம் நாட்டுக்கு ரகசிய கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பெயர் வெளியிடாத அதிகாரி ஒருவர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், சீனாவில் இருந்து இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடந்த மார்ச் மாதம் ரகசிய கடிதம் எழுதப்பட்டது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் வர்த்தகம் உள்பட பிற விவகாரத்தில் சீனாவுக்கு பிரச்சனை ஏற்படும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படக்கூடாது. நீங்கள் வேண்டுமானால் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு கொள்ளுங்கள். ஆனால் சீனாவுக்கு பாதிப்பு வரும்படியாக செயல்பட வேண்டாம்.
இந்தியாவுடன் மீண்டும் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் இந்த கடிதம் எழுதிய மார்ச் மாதத்தில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் உச்சத்தில் இருந்தது. இந்த கடிதம் வந்த பிறகு தான் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் இருந்த கடினமான போக்கு மாறி இருக்கிறது. இருந்தாலும் இந்தியா ஒரு புறம் அமெரிக்கவிடம் வர்த்தக பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் அது தோல்வியில் தான் முடிந்த நிலையில் தற்போது நம் நாடும், சீனாவும் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளன.
இந்த கடிதத்தின் மூலமாக இந்தியாவின் நிலைப்பாட்டை அறிய சீனா விரும்பியது. அதோடு டிரம்பின் வரி விதிப்பு உள்பட சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டால் இந்தியாவை பகையாளியாக வைக்க விரும்பவில்லை என்பதை அந்த கடிதம் மூலம் சீனா வெளிப்படுத்தி இருந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட போகிறீர்களா? இல்லாவிட்டால் சீனாவுடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறீர்களா? என்பதை சாப்ட் டோனில் கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் கடிதம் இருந்தது.
இந்த கடிதம் எழுதப்பட்ட சமயம் மார்ச் மாதம். அது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தில் இருந்த காலம். இதனால் சீனா இந்தியாவை பகைத்து கொள்ளாமல் அரவணைக்க இறங்கி வந்ததை மத்திய அரசு புரிந்து கொண்டது. கடிதம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த முடிவையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் டிரம்ப் நம் நாட்டுக்கு எதிராக வரியை போட்டதால் சீனா கேட்டு கொண்டதன் பேரில் இந்தியாவும் ஜி ஜின்பிங்குடன் கைகோர்க்க திட்டமிட்டது.
இதையடுத்து தான் தற்போது இந்தியா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதன்மூலம் டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட இந்தியாவும், சீனாவும் திட்டமிட்டு கைகோர்த்து உள்ளது உறுதியாகி உள்ளது. இது டிரம்புக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications