ரொம்ப சீரியஸ்.. இதை மட்டும் செய்யவே கூடாது.. டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சொன்ன முக்கிய அறிவுரை
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிவி சேனல் நிறுவனங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிய காலிஸ்தான் தீவிரவாதிகள் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஏராளமானவர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் முன்னெடுத்து வருகின்றனர். அதோடு வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டமும் அவ்வப்போது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடத்தினர். இதனை தடுக்க இந்தியா கோரிக்கை வைத்தும் அதனை கனடா மறுத்தது. இதற்கிடையே தான் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கனடா அரசு விசாரித்து வரும் நிலையில் இந்திய ஏஜென்சி தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொலை செய்து இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஜஸ்டின் ட்ரூடோ கூறுவதாக இந்தியா சாடியது. தற்போது இதுதொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இருநாடுகளும் தூதர் வெளியேற்றம் முதல் பல்வேறு விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகின்றன.
இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தொலைக்காட்சி நிறுவனங்களுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுரைகளுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக இந்தியாவில் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடும் குற்ற வழக்குகளை கொண்டுள்ள நபரை வெளிநாட்டில் தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
அந்த நபர் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் என்பதோடு நம் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான உறவை பாதிக்கும் கருத்துகளை கூறினார். அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதிக்கிறது. இருப்பினும் தொலைக்காட்சி சேனல்கள் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தோர், சீரியஸான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை டிவி சேனல்களில் பேச வாய்ப்பு வழங்க கூடாது'' என தெரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications