ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்
டெல்லி: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ஈரானிடம் இருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் கடந்த 2019ம் ஆண்டு நம் நாடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது ரிலையன்ஸ் முதல் முறையாக 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிடம் இருந்து வாங்கியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுப்பதால் இந்தியா உள்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பது தான். உலகளவில் தினமும் நடக்கும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும்.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் நம் நாடு, சீனா, வங்கதேசம், இலங்கை உள்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டை நோக்கி செல்கிறது.
இந்நிலையில் தான் நம் நாட்டின் ரிலையன்ஸ் நிறுவனம், ஈரான் நிறுவனத்திடம் இருந்து 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை(50 லட்சம் பேரல்) வாங்கி உள்ளது. ஈரானுக்கு சொந்தமான தேசிய ஈரானின் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இந்த கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இந்த கச்சா எண்ணெய், 'ஐஸ் ப்ரெண்ட் ஃபியூச்சர்ஸை விட பேரலுக்கு சுமார் 7 டாலர் பிரீமியத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டள்ளது. இருப்பினும் இந்த கச்சா எண்ணெய் எப்போது ரிலையன்ஸ்க்கு வருகிறது என்ற தகவல் கிடைக்கவில்லை. இதுபற்றி ரிலையன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் அளிக்கவில்லை. அதேபோல் ஈரானின் தேசிய ஈரானின் ஆயில் நிறுவனமும் பதிலளிக்கவில்லை.
ஈரானை எடுத்து கொண்டால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மத்திய அரசு, நம் நாட்டில் இயங்கும் தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. தற்போது அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளதால் டிரம்ப்புக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதோடு, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த ஈரானின் கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடை ஒரு மாத காலம் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும். இருப்பினும் இது கப்பலில் ஏற்றி வைத்துள்ள கச்சா எண்ணெய்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏப்ரல் 19 வரை இந்த வர்த்தகத்தை ஈரான் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவை தொடர்ந்து தான் ஈரான் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் போல் மத்திய அரசும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசை முந்தி ரிலையன்ஸ் நிறுவனம் ஈரானிடம் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடையால் கடந்த 2019ம் ஆண்டு மத்தியில் நம் நாடு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. அதன்பிறகு இப்போது தான் முதல் முறையாக ஈரானின் கச்சா எண்ணெய் ரிலையன்ஸ் நிறுவனம் வழியாக நம் நாட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறது.
ஈரானை எடுத்து கொண்டால் சீனாவின் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்களை வர்த்தகம் செய்து வருகிறது. மேலும் இந்த கச்சா எண்ணெயை சீன நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து வாங்கியதாக கணக்கு காட்டுவது கிடையாது. இப்படியான சூழலில் ஈரான் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளது. இது நம் நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications