தவறு செய்த ஜஸ்டின் ட்ரூடோ.. இந்தியாவில் இருந்து கூட்டமாக வெளியேறிய கனடா தூதரக அதிகாரிகள் - பரபரப்பு
டெல்லி: இந்தியா கொடுத்த கெடு நெருங்கும் நிலையில் வேறு வழியின்றி நம் நாட்டில் இருந்து தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியுள்ளது. மேலும் அவர்கள் இந்தியாவுக்கு பதில் வேறு நாட்டில் இருந்து பணியாற்ற உள்ள நிலையில் அந்த நாடுகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்தியா-கனடா இடையே சுமூகமான உறவு இருந்து வந்தது. இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் இந்த உறவில் விரிசல் விழுந்தது. இதற்கு முக்கிய காரணம் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான்.

சீக்கியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை திட்டி வந்தார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர் தேடப்படும் தீவிரவாதியாகவும் இந்தியா மூலம் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? என்பது இன்னும் தெரியவில்லை. இதில் உண்மையை கண்டறிய முடியாமல் கனடா திணறி வருகிறது. இத்தகைய சூழலில் தனா் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா ஏஜென்சி மூலம் கொலை செய்து இருக்கலாம். இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கனடா இந்தியா மீதான குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளது. இந்தியாவும் கனடாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இருநாடுகளிலும் இருந்து தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் ஜஸ்ட்டின் ட்ரூடோ அடங்கவில்லை.
இந்தியா மீது குற்றம்சாட்டும் அவர் ஆதாரங்களை மட்டும் வெளியிடவில்லை. இதனால் அவர் தவறான குற்றச்சாட்டை இந்தியா மீது சுமர்த்தியுள்ளதாக பல நாடுகள் சந்தேகம் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கனடாவுக்கு இன்னொரு பதிலடியை இந்தியா கொடுத்தது. இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் மொத்தம் 62 பேர் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இதில் 41 பேரை வரும் 10ம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தியாவில் இந்த அதிரடி நடவடிக்கையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்பார்க்கவில்லை. இந்த உத்தரவை தொடர்ந்து இறங்கி வந்த அவர், ‛‛கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். இந்தியாவுடன் நாங்கள் சவாலான நேரத்தை கடந்து வருகிறோம். இந்தியாவுக்கு நாங்கள் பதிலடி கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம்'' என்றார். ஆனால் இந்தியா அதனை கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி இந்தியா கூறியபடி பெரும்பாலான தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுபற்றி கனடாவின் சிடிவி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படும் தூதரக அதிகாரிகள் சிங்கப்பூர் அல்லது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications