"இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டனர்.." திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா
டெல்லி: மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறையைக் கைவிடுவோருக்கு மறுவாழ்வும் அளித்து வருகிறது. இதற்கிடையே நாட்டில் இப்போது மாவோயிஸ்ட்கள் கிட்டத்தட்ட முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் கடைசி கோட்டையான சத்தீஸ்கரும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே மார்ச் 31க்குள் மாவோயிஸ்ட் வன்முறையை ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், மக்களவையில் இது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்ட்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமித் ஷா
நாட்டில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் கடைசி கோட்டையான சத்தீஸ்கரின் பஸ்தரும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். அவர் மேலும் பேசுகையில், "நாட்டில் நக்சலைட்டுகள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளனர். இந்த செயல்முறை முடிந்ததும் நாட்டு மக்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.. ஆனால் நாங்கள் நக்சல் இல்லாத நிலையை அடைந்துவிட்டோம் என்று இப்போதே என்னால் சொல்ல முடியும்.
பஸ்தரில் நக்சலைட் பிரச்சனை கிட்டத்தட்ட நீக்கப்பட்டுவிட்டது. அங்கு நாங்கள் தேவையான பல்வேறு வளர்ச்சி பணிகளைச் செய்து வருகிறோம். பஸ்தர் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைக் கட்டி வருகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகா மற்றும் பஞ்சாயத்திலும் சமூக சுகாதார மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு, ஐந்து கிலோ உணவு தானியங்கள் கிடைத்து வருகின்றன.
அச்சுறுத்தல்
இத்தனை காலமாக அங்கு மக்களை இந்த பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வந்தனர். இதன் காரணமாகவே பஸ்தர் மக்கள் பின்தங்க நேர்ந்தனர். அதனால் தான் வளர்ச்சி அவர்களைச் சென்றடையவில்லை. இன்று அந்த பயங்கரவாதம் நீக்கப்பட்டு, பஸ்தர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது" என்றார். தெரியாமல் நக்சல் பாதையில் சென்று சிக்கிக் கொண்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகவே இருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்..
வன்முறையைக் கைவிடுங்கள்
இது தொடர்பாக அவர் மேலும், "பஸ்தரில் நான் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.. உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள், அரசு உங்கள் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும். அவர்கள் ஆயுதங்களைக் கைவிட மறுக்கிறார்கள். கைவிட்டு வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசின் கொள்கை தெளிவானது.. ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். வன்முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குக் கடுமையான பதில் கிடைக்கும்" என்றார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
மாவோயிஸ்ட் வன்முறை 20,000 இளைஞர்களின் உயிர்களைப் பறித்ததுடன், 12 கோடி மக்களைப் பாதித்தது என்று சுட்டிக்காட்டிய அமித்ஷா, பழங்குடியினர் மற்றும் சமூகங்கள் வளர்ச்சியடையாதது காங்கிரஸ் அரசின் தோல்விதான் என்றார். நாட்டில் மாவோயிசம் பெருகியதற்கு, 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "கடந்த 75 ஆண்டுகளில், காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்படியானால், பழங்குடியின சமூகங்கள் ஏன் வளர்ச்சியடையாமல் இருந்தன? காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை விட, நக்சலைசம் மிக பெரிய சவால் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இதைத் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அமித் ஷா கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications