“இப்போ சொல்றேன்! ராகுல் இல்ல.. அவரோட 4 தலைமுறை வந்தாலும்..” ஜம்மு காஷ்மீர் குறித்து அமித் ஷா ஆவேசம்!
டெல்லி: "ராகுல் காந்தியால் மட்டுமல்ல, அவரது நான்காவது தலைமுறை கூட, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், "தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியல் சாசன புத்தகம் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் அம்பலமானார். ராகுல் காந்தி காட்டிய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார்.
எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு என்று எழுதப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நான் ஒன்றை இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்து ஆக்காதீர்கள். இது அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பற்றியது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கேலிக்கூத்து ஆக்கியுள்ளது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார். ஓபிசி, பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தீய நோக்கத்தைக் கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி ஓபிசி ஒதுக்கீட்டிற்கு எதிரானது. மகாராஷ்டிராவில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ராகுல் காந்தியால் மட்டுமல்ல, அவரது நான்காவது தலைமுறை கூட, சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை நான் எச்சரிக்கிறேன். பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்தபோது, நான் நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டு வந்தேன். ஆனால் ராகுல் காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் ஆகியோர் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். பள்ளத்தாக்கில் இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் சட்டப்பிரிவை நீக்குவதை எதிர்த்தார்கள்.
மன்மோகன் சிங் அரசின் போது பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன, ஆனால் மோடி பிரதமரான பிறகு, உரி மற்றும் புல்வாமாவில் பயங்கரவாதிகளை அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தன. ஜார்க்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. ஊழல் தலைவர்கள் தலைகீழாக தூக்கிலிடப்படுவார்கள்" எனப் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகின்றன. இதே கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து தேர்தலை சந்தித்த தேசிய மாநாட்டு கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications