செங்கோட்டையில் பிரதமர் மோடி முன்பே காலியாக இருந்த அந்த சேர்.. நாட்டிற்கு அனுப்பும் செய்தி என்ன!
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில், அங்கு காலியாக இருந்த இருக்கைகள் கவனிக்க வைத்துள்ளது.
இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடு முழுக்க இன்றைய தினம் மூவர்ணக் கொடி ஏற்றி நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம்.

இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
மோடி: பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது காலியாக இருந்த இருக்கைகள் தான் இப்போது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. டெல்லியில் நடந்த இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர்கள் தொடங்கி பல முக்கிய பிரமுகர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும், இந்த நிகழ்வில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விலகியே இருந்தார். அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கார்கேவுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் பேசும் போது அவருக்கு எதிராக முதல் வரிசையிலேயே காலியாக இருந்த சீட்டின் படம் இப்போது டிரெண்டாகிறது. அவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முந்தைய பிரதமர்கள் நாட்டிற்கு அளித்த சேவைகளை அவர் நினைவுகூர்ந்திருந்தார்.
என்ன காரணம்: இருப்பினும், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை.. கார்கேவின் பெயருடன் இருந்த சேர் காலியாக இருக்கும் படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உடல்நிலை சரியில்லாததால் அவர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாத கார்கே வீடியோ மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தார்.
வீடியோ: அந்த வீடியோவில் அவர் நாட்டின் முதல் பிரதமர் நேரு மற்றும் நாட்டை ஆண்ட காங்கிரஸ் பிரதமர்கள் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, பிவி நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், அவர் தனது வீடியோவில் பாஜகவின் வாஜ்பாய் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவர் அந்த வீடியோவில், "நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களித்துள்ளனர். ஆனால், இப்போது சிலர் ஏதோ இப்போது தான் இந்தியா திடீரென வளர்ந்துள்ளது என்று சிலர் கூற முயல்கின்றனர்.
வாஜ்பாய் உட்பட அனைத்து பிரதமர்களும் தேசத்தைப் பற்றிச் சிந்தித்து, வளர்ச்சிக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால், இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.. எதிர்க்கட்சிகளை முடக்க மத்திய அரசு ஏஜென்சிகளை பயன்படுத்துகிறார்கள்.. இப்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை மட்டுமின்றி, தேர்தல் கமிஷனும் வலுவிழந்து வருகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக்குகளை ஆப் செய்கிறார்கள். பேச விடாமல் தடுக்கிறார்கள்.. சஸ்பெண்ட் செய்கிறார்கள்.
அழிக்க மாட்டார்கள்: பெரிய தலைவர்கள் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என்பதற்காக ஒரு போதும் கடந்த கால வரலாற்றை அழிக்க மாட்டார்கள்.. ஆனால், இப்போது சிலர் அனைத்தின் பெயர்களை மட்டும் மாற்றி வருகின்றனர்.. கடந்த கால திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பெயர் மாற்றிக் கொண்டு வருகிறார்கள்..
இப்போது நாட்டில் அமைதியை நிலைநாட்டிய பழைய சட்டங்களின் பெயரை மாற்றுகிறார்கள். முதலில் 'அச்சே தின்' என்றார்கள், அதன் பிறகு புது இந்தியா என்றார்கள் இப்போது அம்ருத் கால் என்கிறார்கள். தோல்விகளை மறைக்கப் பெயர்களை மட்டுமே மாற்றுகிறார்கள்" என்று அவர் சாடினார். இதற்கிடையே பிரதமர் மோடி பேசும் போது அவருக்கு எதிராகவே இருந்த காலி சேர் படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications