வின்ஸ்டன் சர்ச்சில் அப்படி சொல்லியிருந்தாரே..ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து கூறி ஆனந்த் மகிந்திரா ட்விட்!
டெல்லி: இந்திய தலைவர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்று கடந்த 1947- ஆம் ஆண்டு வின்சஸ்டன் சர்ச்சில் கூறியதை குறிப்பிட்டு இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ஆனந்த் மகிந்திரா டிவிட் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக இருந்து வந்த போரீஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் தன் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவியது. இதில் லிஸ் டிரஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ்
ஆனால் அவர் பதவி வகித்த 40 நாட்கள் கூட ஆகாத நிலையில், கடந்த 20-ஆம் தேதி அவரும் தன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் மீண்டும் தொடங்கின. இதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்தனர்.

ரிஷி சுனக் தேர்வு
ஆனால் மொத்தம் உள்ள 357 எம்.பிக்களில் 100 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும். இதில் ரிஷி சுனக்கை தவிர போரீஸ் ஜான்சனும், பென்னி மார்டண்டும் 100 எம்.பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால் அவர்கள் இருவரும் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினர். இதனால் 140 எம்.பிக்களின் ஆதரவை பெற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகவும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனந்த் மகிந்திரா ட்விட்
இந்திய வம்சாவளி ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காரணத்தால் ரிஷி சுனக் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்தியாவில் இருந்தும் உலக நாட்டு தலைவர்களும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பலரும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகிந்திராவும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.

திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "இந்திய தலைவர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்று கடந்த 1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது வின்சஸ்டன் சர்ச்சில் கூறினார். ஆனால், இன்று நமது 75-வது சுதந்திர தின ஆண்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதை பார்க்க ஆவலாக இருக்கிறோம். இது வாழ்க்கையில் மிக அழகானது" என்று பதிவிட்டுள்ளார்.

மோடி வாழ்த்து
75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்க இருப்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை என பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பலரும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications