சம்பள பாக்கி கேட்டதுக்கு இப்படியா.. ஊழியர் வாயில் காலணியை திணித்து கொடூரமாக தாக்கிய பெண் ஓனர்.. ஷாக்
அகமதாபாத்: வேலையை விட்டு நின்ற பிறகு சம்பள பாக்கியை கேட்டதால் கோபம் அடைந்த பெண் ஓனர், முன்னாள் ஊழியரின் வாயில் செருப்பை திணித்து கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தின் மோர்பி நகரத்தில் நபர் ஒருவர் தான் பணியாற்றிய நிறுவனத்தில் வேலையை விட்டு நீக்கியதால் பணி செய்த நாட்களுக்கான சம்பளத்தை கேட்டு சென்ற போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாயில் செருப்பை திணித்து தாக்கிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசர் சம்பள பாக்கியை கேட்டதற்காக நபரை தாக்கிய பெண் தொழில் அதிபர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த விவரங்களை பார்க்கலாம். குஜராத்தின் ரனிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை விபுதி படேல் என்ற பெண் நடத்தி வருகிறார். மோர்பி நகரில் உள்ள ரவபார் கிராஸ்ரோடு பகுதியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நிலேஷ் தல்சானியா(வயது 21) என்ற தலித் நபரை விபுதி படேல் தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
வாயில் செருப்பை திணித்து: டைல்ஸ் மார்க்கெட்டிங் பணிக்காக வேலைக்கு சேர்க்கப்பட்ட நிலேஷ் தல்சானியாவிற்கு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக விபுதி படேல் கூறியிருக்கிறார். வெறும் 16 நாட்களில் வேலையை விட்டு நிலேஷ் தல்சானியாவை பெண் ஓனர் நீக்கியிருக்கிறார்.
இதனால், 16 நாட்கள் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை விபுதி படேலிடம் கேட்டுள்ளார். ஆனால், சம்பளத்தை கேட்டதால் ஆத்திரம் அடைந்த விபுதி படேல், தனது சகோதரர் மற்றும் மேனேஜருடன் சேர்ந்து தல்சானியாவை தாக்கியுள்ளார். மேலும் வாயில் செருப்பை திணித்து பெல்டால் கடுமையாக தாக்கியதோடு, சம்பளம் கேட்டதற்கு மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.
மேலும், இந்தப்பக்கம் வந்தால் தொலைத்து விடுவேன் என எச்சரித்ததோடு, பணம் கேட்டு மிரட்டியதால் என்னை இப்படி தாக்கினார்கள் என நிலேஷ் தல்சானியாவை பொய் கூற வைத்து வீடியோவையும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்களின் பிடியில் இருந்து தப்பிய பிறகு தல்சானியா தனக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் கூறி புகாரளித்தார்.
இதையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் விபுதி படேல், அகா ரனிபா மற்றும் அவரது சகோதரர்களான ஓம் படேல், மேனேஜர் பிரகிஷ்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications