அமலாக்க துறை அலுவலகத்தில் அனில் அம்பானியின் மனைவி! அந்நிய செலாவணி வழக்கில் ஆஜர்! என்ன மேட்டர்
டெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஒரு காலத்தில் இந்தியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானியின் சகோதரரான இவர் பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார். இருப்பினும், அனைத்தும் நஷ்டமாகவே அவர் அத்தனையையும் இழந்தார்.

இதற்கிடையே அவர் மீது அந்நிய செலாவணி முறைகேடு புகாரும் இருக்கிறது.. இது தொடர்பாக விசாரணையை அமலாக்கத் துறை ஒரு பக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் இப்போது அவரது மனைவியும் மூத்த நடிகையுமான டினா அம்பானி அமலாக்க இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதே வழக்கில் நேற்று அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜராகியிருந்த நிலையில், இன்று அவரது மனைவி டினா ஆஜாராகியுள்ளார்.
அம்பானியின் நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புதிய வழக்கு இது எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். முன்னதாக 64 வயதான அனில் அம்பானி, யெஸ் வங்கியின் ராணா கபூருக்கு எதிரான பணமோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டு அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகள் மூலம் ₹ 420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானிக்கு கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தற்காலிக தடை விதித்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அனில் அம்பானி தனது வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.












Click it and Unblock the Notifications