சொன்ன மாதிரியே.. ஒரே நாளில் 11+ திருமணங்களுக்கு போன அண்ணாமலை.. உற்று கவனித்த டெல்லி பாஜக
டெல்லி: டெல்லியில் நடந்த தமிழக பாஜக தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளாத நிலையில் நேற்று ஒரே நாளில் அவர் 11 திருமணங்களுக்கும் மேல் கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை ஓரம்கட்டப்படுகிறார்
பாஜக தலைவர் அண்ணாமலை இதனால் ஓரம்கட்டப்பட்டதாக செய்திகள் வந்தன. முன்னதாக பாஜகவின் பூத் முகவர்களில் 50% பேர் போலியானவர்கள் என்றும், இல்லாத பெயர்களை இருப்பதாகக் கணக்கு காட்டியதாகவும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷிடம் புகார் தெரிவித்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வழக்கமாக, புதிய தலைவர்கள் தங்களது நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த பட்டியலில் நடிகை குஷ்பு மாநில துணைத் தலைவராகவும், சூர்யா இளைஞரணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், எஸ்.ஆர். சேகர் மாநிலப் பொருளாளராகவும், கே.டி. ராகவன் மாநிலப் பிரிவு அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜகவில் மீண்டும் கே.டி. ராகவனுக்குப் பதவி கிடைத்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாமலை இருந்தவரை இவர் ஓரங்கட்டப்பட்டு இருந்தார்; இவருக்குப் பதவி எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் என்றும் கூட கூறப்பட்டது. அண்ணாமலை ஓரங்கட்டப்பட்ட நிலையில், கே.டி. ராகவனுக்குப் பதவி கிடைத்துள்ளது. அதேபோல், அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்பட்ட வினோஜ் பி. செல்வம் வகித்து வந்த மாநிலச் செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு அண்ணாமலைக்கு எதிராக இருந்த பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மீட்டிங்கை புறக்கணித்த அண்ணாமலை
அதேபோல் அதிமுகவை அண்ணாமலை கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. அதிமுக உடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்றும் அமித் ஷா பாஜகவினருக்கு உத்தரவிட்டு உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் நடந்த பாஜக மீட்டிங்கை அண்ணாமலை தவிர்த்து உள்ளார்.
டெல்லியில் நடந்த தமிழக பாஜக தலைவர்கள் கூடத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளாத நிலையில் நேற்று ஒரே நாளில் அவர் 11 திருமணங்களுக்கும் மேல் கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக பல திருமணங்கள் இருப்பதால், தனிப்பட்ட பணிகள் காரணமாக டெல்லிக்கு செல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார். அவர் கூறியபடியே 11க்கும் மேற்பட்ட திருமணங்களில் நேற்று அண்ணாமலை கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அண்ணாமலை அளித்த விளக்கத்தில், வேறு வேறு மனோபாவம் இருக்கக்கூடிய, சித்தாந்தம் இருக்கக்கூடிய குழுக்கள் என்டிஏ கூட்டணியில் இருக்கும்போது, பொதுவான நோக்கம் என்ன? திமுக தலைமையிலான ஆட்சியை 2026ல வீட்டுக்கு அனுப்பனும் அப்படிங்கறதுதான். பல குழுக்களால் பிரச்சனைகள் இருக்கிறது. இல்லை என நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலிருந்து இருக்கக்கூடிய பிரச்சனைகள்தான். அதெல்லாம் வருகின்ற காலத்தில் சரியாகும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. டிடிவி மற்றும் ஓபிஎஸ் பெருந்தன்மை மிக்க அரசியல்வாதிகள். அவர்கள் இருவருடைய அன்பையும் நான் பெற்றிருக்கின்றேன். ரொம்ப நெருக்கமா அவர்களிடம் நான் பேசக்கூடிய ஒரு மனிதன். நிச்சயமாக நல்ல ஒரு கூட்டணி அமைக்க அவங்க மறுப்பர்சீலனை செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications