தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும்! திடீரென ஏற்பட்ட மாற்றம்
டெல்லி: இன்னும் சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பான விவாதங்களில் பங்கேற்க போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த முடிவை வாபஸ் பெற்றிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, லோக்சபா தேர்தல் முடிவுறுகிறது.
இன்று உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4 தொகுதிகள்) என ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவர உள்ளன. இது குறித்து விவாதங்கள் செய்தி ஊடகங்களில் அனல் பறக்கும். இதில் அனைத்து கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இப்படியான விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று அறிவித்திருந்தது. இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த முடிவை திரும்பப்பெறுவதாக காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. அதாவது, விவாதங்களில் பங்கேற்போம் என்று கூறியுள்ளது. முன்னதாக இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, "இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும். பாஜக ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் கூட கணித்து கூறியுள்ளன. காங்கிரஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications