டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்... தடையை மீறி குவிந்த மக்கள்
Recommended Video
டெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் போராட்டம் நடைபெறும் இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி வீதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அதிருப்தியைக் காட்டுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் டெல்லி செங்கோட்டையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக இன்று இடதுசாரிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
அத்துடன் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் போடுவதை தடுக்கும் வகையில் செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் செங்கோட்டையில் குவிய தொடங்கினர். அவர்களை வழி எங்கும் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டம்
இன்னொரு பக்கம் டெல்லியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மதியம் வாக்கில் கூடத்தொடங்கினர். ஜந்தர் மந்தரில் கூடியவர்கள் 'சி.ஏ.ஏ சே ஆசாதி மற்றும் என்.ஆர்.சி சே ஆசாதி' என்று இரு சட்டங்களுக்கு எதிராக வலுவாக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.

போலிஸ் கட்டுப்பாடு
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை மோதல்கள் காரணமாக டெல்லியின் மண்டி ஹவுஸ் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மெட்ரோ நிலையங்கள்
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) 20 மெட்ரோ நிலையங்களை மூடியது. ராஜீவ் சௌக், பரகாம்பா மற்றும் ஐ.டி.ஓ உள்ளிட்ட அனைத்து மத்திய டெல்லி நிலையங்களும் மூடப்பட்டன. குருகிராமின் எல்லையில் நின்று கொண்ட டெல்லி காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து ஒவ்வொரு வாகனமாக போராட்டக்காரர்கள் உள்ளார்களா என்று சோதித்த பின்னரே அனுப்பினர். இதனால் அந்த பகுதியல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பதினாறு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

எங்கு துண்டிப்பு
குடியுரிமை சட்ட போராட்டம் காரணமாக முதல்முறையாக டெல்லியில் (குறிப்பிட்ட பகுதிகள்) செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. டெல்லி காவல்துறை பிறப்பித்த உத்தரவின்படி, வடக்கு டெல்லி மற்றும் மத்திய டெல்லி பகுதிகளான மண்டி ஹவுஸ், சீலம்பூர், ஜாபர்பாத் மற்றும் முஸ்தபாபாத், ஜாமியா நகர், ஷாஹீன் பாக் மற்றும் பவானா.ஆகிய பகுதிகளில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது.

இதுவே முதல்முறை
ஆரம்பத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மொத்தம் நான்கு மணி நேரம் செல்போன் சேவைகளை நிறுத்தி வைக்க காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பலரும் பிற்பகலுக்கு பின்னரும் செல்போன சேவை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்












Click it and Unblock the Notifications