ரபேல் மூலம் ராகுல் காந்தியை வெளிநாட்டு கும்பல் இயக்குகிறது.. ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
ரபேல் விமான ஒப்பந்தத்தை காரணம் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வெளிநாட்டு கும்பல் இயக்குகிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தை காரணம் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வெளிநாட்டு கும்பல் இயக்குகிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தினமும் ரபேல் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே கடும் விவாதம் நடந்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிய இரண்டு நாட்களே இருக்கிறது.
இதனால் ரபேல் விவகாரம் தொடர்பாக நடக்கும் விவாதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு இன்று பாஜக சார்பாக பதில் அளிக்கப்பட்டது.

ரவிசங்கர் பிரசாத்
ரபேல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். நேற்று நிர்மலா சீதாராமனை பதவி விலக வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் ராகுலின் இந்த கோரிக்கைக்கு இன்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

என்ன சொன்னார்
ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய்யான தகவல்களை கூறி அவையை குழப்ப பார்க்கிறார். ரபேல் ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிந்து கொள்ளாமல் அவர் அவையில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். ராகுலுக்கு பின் யாரோ இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

வெளிநாட்டு குழு
ராகுலை வெளிநாட்டு கும்பல் இயக்குகிறது. ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான வெளிநாட்டு குழு ராகுலை இயக்குகிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் சிக்கி இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேல் மூலம் ராகுல் காந்தி இயக்கப்படுகிறார்கள். இந்திய ராணுவ பாதுகாப்பிற்கு எதிராக ராகுல் செயல்படுகிறார்.

ராகுல் குடும்பம்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் என்றாலும் சரி, ரபேல் என்றாலும் சரி, எல்லாவற்றிலும் ராகுலின் குடும்பம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக ராகுல் செய்வது மொத்தமும் மிகவும் பொய்யான வாதம். வேறு இடத்தில் பலன் பெறுவதற்காக ராகுல் இப்படி பேசுகிறார், என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications