தமிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் - அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியசுவாமி மனு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் வசமுள்ள கோவில்களில் தமிழக அரசு அர்ச்சகர்களை நியமிப்பதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும், தேவைபட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். சுப்ரமணிய சுவாமியின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் எதையும் எதிர்கொள்ள தயார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
இதனிடையே தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

தமிழ் அர்ச்சனைக்கு தடையில்லை
இந்த நிலையில் திட்டத்தை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு கடந்த 3ம் தேதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், ''கடந்த 2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை.இதில் குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

சுப்ரமணிய சுவாமி ரிட் மனு
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தழிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை
அதில், கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு நியமிக்கக் கூடாது
கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தலையிடக்கூடாது
கோவில் சொத்துக்களின் உரிமையாளராக அரசு இருக்க முடியாது. இதனால் சமயம் சார்ந்த செயல்களில் அரசு தலையிடக் கூடாது. கோவில் சம்பிரதாயத்தினர்தான் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களை நியமித்துக்கொள்ளும் விவகாரத்தில் அரசு தலையிடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கு ஓரிரு நாளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications