அழிச்சிடு பரமா.. கட்சியே இருக்கக் கூடாது-அருணாச்சல பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரை பாஜக ஆடிய ஆட்டம்!
டெல்லி: அரசியல் கட்சிகளை சிதைத்து அழித்து அதிகாரத்தை தக்க வைப்பதை பாஜக இப்போது தலையாய கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கிறது. அதுதான் இன்று மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.. நாளை எந்த மாநிலத்திலும் நடக்கலாம்.
ஆனால் 1996-ம் ஆண்டு..
மத்தியில் பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்ட தருணம்.. பிரதமர் வாஜ்பாய் ராஜினாமா செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசுகையில், சரத் பவார் இங்கே அமர்ந்திருக்கிறார்; சரத் பவார் தனது கட்சியை (காங்கிரஸை) எப்படி உடைத்து ஆட்சியை அமைத்தார் என்பதை ஜஸ்வந்த்சிங் விளக்கிக் கொண்டிருந்தார். அதிகாரத்திற்காக சரத்பவார் செய்தாரா அல்லது மகாராஷ்டிராவின் நலனுக்காக செய்தாரா என்பது வேறு விஷயம், ஆனால் அவர் தனது கட்சியை உடைத்தார். நான் அப்படி செய்து அதிகாரத்தைத் தக்கவைக்கவில்லை என பெருமிதம் பொங்க கூறியிருந்தார்.

இன்று 27 ஆண்டுகளுக்குப் பின் அதே சரத்பவாரின் சொந்த கட்சியான தேசியவாத காங்கிரஸ், சொந்த அண்ணன் மகனாலேயே துண்டாடப்பட்டு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிதறடித்திருப்பது, கட்சியை உடைக்கும் அரசியல் செய்யமாட்டோம் என்று சொன்ன அதே வாஜ்பாயின் பாஜகதான்.
1996-ல் வாஜ்பாய் உரையாற்றியதை போல 2013-ம் ஆண்டு வரை பாஜக ஒரு கொள்கையாக, அதாவது கட்சிகளை உடைத்து அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதை கோட்பாடாக, தேர்தல் அரசியல் வியூகமாக வைத்திருக்கவில்லை. அதனால்தான் டெல்லியில் ஆம் ஆத்மியால் அரசாங்கத்தையும் கூட அமைக்க முடிந்தது. ஆனால் 2014-க்குப் பிந்தைய பாஜக இந்த கோட்பாட்டை தூக்கி எறிந்தது. அரசியல் என்பது வெற்றிக்கானது; அதற்கு எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதை புதிய சித்தாந்தமாகவே அறிவித்துவிட்டு ஆட்டத்தை ஆடியது பாஜக.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏக்களை கூட பாஜக விட்டு வைக்கவில்லை. அத்தனை பேரையும் பாஜக அள்ளிக் கொண்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2014-ல் காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய பிள்ளையார் சுழியாகவும் இது அமைந்தது.
2015-ல் அஸ்ஸாமில் ஆபரேஷன் லோட்டஸில் சிக்கியவர் அஸ்ஸாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா சர்மா. இப்போது அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவும் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் அசைக்க முடியாத சக்திகள்.
2017-ல் மணிப்பூரில் பாஜக வென்றது. ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏதான் பாஜகவுக்கு தாவினார். ஆனால் கட்சி மாறாமலேயே 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக அரசாங்கத்தை ஆதரித்தனர்.
2019-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஓடினர். இதனால் குமாரசாமி ஆட்சியே கவிழ்ந்தது. இப்போது அதே குமாரசாமி, பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறார்.
2020-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் 22 எம்.எல்.ஏக்கள் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தனர். இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்களை தூக்கியது பாஜக.
திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே கபளீகரம் செய்து இடதுசாரிகளின் கோட்டை எனும் சரித்திரத்தையே தகர்த்தது பாஜக.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரையும் வளைத்துப் போட்டு பாஜக காலூன்றிக் கொண்டது.
பன்னெடுங்காலம் அதிகாரத்தை சுவைத்துப் பழகியது காங்கிரஸ். அதனால் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை என்பதைத்தான் பல மாநில காங்கிரஸ் கட்சி அழிந்து போனதன் வரலாறு சொல்கிறது. காங்கிரஸின் இன்னொரு உருவமான சரத்பவார் கட்சிக்கும் இது பொருந்தும். ஏனெனில் சரத்பவார் தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியை நாகலாந்தில் பாஜக அரசுக்கு ஆதரவு தர சொன்னார். மகாராஷ்டிராவில் இந்துத்துவா சித்தாந்த கட்சியான சிவசேனாவுடன் இணைந்து அரசாங்கமே அமைத்தார். இதையெல்லாம் சரத்பவார் நியாயப்படுத்திய காரணங்களே இப்போது தேசியவாத காங்கிரஸின் அஜித்பவாரும் பிரபுல் பட்டேலும் சரத்பவாரை விட்டு ஓடுவதற்கும் காரணங்களாகவே சொல்லப்படுவது வரலாற்றின் விசித்திரம்தான்!












Click it and Unblock the Notifications