நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை வாதத்திற்கு பிறகு தானே நேரடியாக நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதிட்டது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலின் வாதத்திற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ய்ப்பட்டார். கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மேலும் ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் வருமான வரித்துறை தகவல்களை அவரது வழக்கறிஞர்கள் தர மறுப்பதாகவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற நபர்களுடன் கெஜ்ரிவாலையும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது".
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்ததும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலே தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். கெஜ்ரிவால் தரப்பில் வாதிட வழக்கறிஞர் கோர்ட் அறையிலே இருந்த போதும் கெஜ்ரிவால் நேரடியாக வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும், கெஜ்ரிவால் தனது வாதத்தை முன்வைத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "என்னை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கும் வழக்கு 2 ஆண்டுகளுக்கு முந்தையது. எனக்கு எதிராக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை. எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை. எனது பெயர் நான்கு அறிக்கைகளில் மட்டுமே வந்துள்ளது.
மணிஷ் சிசோடியாவின் பிஏவான சி அரவிந்த் என்பவர், எனது முன்னிலையில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். என்னை சந்திக்க பலரும் வருகிறார்கள். அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். எனவே, கைது செய்யும் அளவுக்கு இது போதுமான ஆதராமா என்ன? இரண்டாவதாக கமுந்தா ஸ்ரீனிவாசலு ரெட்டி என்பவர் தனது குடும்ப அறக்கட்டளை தொடர்பாக என்னை சந்தித்து இருக்கிறார்.
என்னைப்பற்றிய வாக்குமூலத்தை அவர்கள் மாற்றிய பிறகு, அவரது மகன் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். விஜய் நாயர் என்பவருடன் என்னை சந்தித்தாக சரத் ரெட்டி கூறியிருக்கிறார்.. அப்போது பணம் எங்கே ?" என்று கெஜ்ரிவால் வாதிட்டார்.
கெஜ்ரிவாலின் வாதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை தனது தரப்பு வாதத்தை மீண்டும் வைத்தது. அப்போது, "கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும் தங்களிடம் இது தொடர்பாக ஆதாரம் உள்ளதாகவும் கூறியது". பரபரப்பான வாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.












Click it and Unblock the Notifications