தொழிலதிபர்களுக்கு ரூ10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பாஜகவா? மக்களுக்கான ஆம் ஆத்மியா- கெஜ்ரிவால்
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் 400 முதல் 500 பேருக்கு ரூ10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது; மக்கள் நலனுக்காக நிதியை செலவிடும் கெஜ்ரிவால் மாடல் தேவையா? மக்கள் வரிப்பணத்தில் கார்ப்பரேட் நண்பர்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்யும் பாஜக மாடல் தேவையா? என்பதை டெல்லி வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசானது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 400 முதல் 500 கார்ப்பரேட் நண்பர்கள் பெற்ற ரூ10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.

பிரதமர் மோடியின் நண்பர் ஒருவருக்கு மட்டும் ரூ46,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றொரு கார்ப்பரேட் தொழிலதிபருக்கு ரூ5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மக்கள் முன்பாக நாங்கள் இரண்டு மாடல் அரசுகளை முன்வைக்கிறோம். ஒன்று மக்கள் பணத்தை மக்களுக்காக செலவிடுகிற கெஜ்ரிவால் மாடல்.. மற்றொன்று மக்களின் வரிப்பணத்தை காப்பரேட் நண்பர்களுக்கு வாரிக் கொடுக்கிற பாஜக மாடல். இந்த இரு மாடல் அரசுகளில் எது தேவை என்பதை டெல்லி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த நாட்டின் மக்கள் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரிகளை அரசுக்கு செலுத்துகின்றனர். ஆனால் மத்திய அரசோ, மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு வாரிக் கொடுக்கிறது. இது அநீதியானது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மூலம் ஒவ்வொரு மாதம் ரூ25,000 வரையில் நன்மைகளைப் பெற்று வருகின்றனர். டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் இத்தகைய நலத் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிடும். ஏனெனில் பாஜகவின் சித்தாந்தம் என்பதே காப்பரேட் தொழிலதிபர்களின் நலன்களுக்கானது; இந்த சித்தாந்தத்துக்கு எதிரானவை மக்கள் நலத் திட்டங்கள்; அதனால்தான் மக்கள் நலத் திட்டங்களை பாஜக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்துவிடும் என்கிறோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications