"கைதுக்கு ரெடியாகுங்கள்.." அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன 2 நாட்களில்.. மது கொள்கை வழக்கில் சிபிஐ சம்மன்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் இப்போது அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்குத் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது.

அதாவது மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த பிப். மாதம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான இவர், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
இதனிடையே இதே விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சம்மன்: சமீப காலங்களில் முதல்வர் பதவியில் இருப்பவர் விசாரணை அமைப்பால் விசாரணைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி முதல்வரிடம் மதுபான கொள்கை குறித்து விசாரணை நடத்த புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து எதுவும் கூறவில்லை.
இருப்பினும், கடந்த காலங்களில் மதுபான ஊழல் என்று எதுவும் நடக்கவில்லை என்றும் இது மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்றுமே அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வந்துள்ளார். நரேந்திர மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இப்படி தங்களைப் பழிவாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அச்சம் இல்லை: இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், "இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளைக் கண்டு ஆம் ஆத்மி கட்சியில் யாரும் பயப்பட மாட்டார்கள். கடந்த காலங்களிலும் இதுபோல எங்கள் கட்சித் தலைவர்கள் குறிவைத்துள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஊழலுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எங்கள் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டெல்லி அரசு புதிய மதுக் கொள்கையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் தலைநகரில் மது விற்பனை மீதான அரசின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது, தனியார் விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாகவே சிபிஐ விசாரித்து வருகிறது. கெஜ்ரிவாலின் அரசின் உயர் மட்ட தலைவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், இப்போது கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிறைக்கு செல்ல ரெடியா இருங்க: முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், டெல்லி, பஞ்சாபில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குத் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்திருந்தது. அப்போது கெஜ்ரிவால் சிறைக்குச் செல்லத் தயாராக இருங்கள் என்றும் பயமாக இருந்தால் கட்சியைவிட்டு வெளியேறுங்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications