கவர்னர் தலையிடக்கூடாது! ஆளுநருக்கு ஒத்துழைப்பு கொடுக்காதீங்க.. அதிகாரிகளுக்கு அமைச்சர் கறார்!
சென்னை: மதுரையில் நேற்று பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆளுநர் எப்படி நேரடியாக வந்து ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு ஆய்வு நடத்த முடியும்? என்று திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஆளுநர் ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் உத்தரவிட்டிருக்கிறார்.
அரசு திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லை என்றும், அனுமதியின்றி ஆளுநரை அரசு அதிகாரிகள் சந்திக்க கூடாது என்றும் அமைச்சர் கறாராக கூறியிருக்கிறார்.

ஆளுநரின் ஆய்வு
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதுரை சென்றிருந்த ஆளுநர், வைகை நதி குறித்து பேசியிருந்ததும், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தியிருந்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை சவுராஷ்டிரா கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியை பார்த்தேன். நதி இருக்கிறது.. ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்டு எடுக்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று பேசியிருந்தார்.
பின்னர் மதுரை ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இதுதான் பஞ்சாயத்துக்கு காரணம்.
எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநர் ஆய்வு செய்தார் என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த Sofa Model அரசிற்கும் கடும் கண்டனங்கள்" என தனது x பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆளும் கட்சி தரப்பும் எதிர்ப்பு
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தரப்பு மட்டுமல்லாது, ஆளும் கட்சி தரப்பும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக விசிக அமைச்சர் வன்னி அரசு, "இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா? மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு ஆளுநர் வாய் திறப்பாரா?" என்று கேள்வி எழுப்பி.. ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் நிர்மல் குமார் கறார்
இப்படி இருக்கையில் அமைச்சர் நிர்மல் குமார், ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு ஆய்வு மேற்கொள்ளலாம். எந்த அதிகாரமும் இல்லாமல் ஆளுநர் எங்கும், எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது. தேவையில்லாமல் அரசு நிர்வாகத்தில் ஆய்வு செய்வதாக கூறி தலையிட்டால் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்படும்.
ஒத்துழைப்பு தராதீங்க
எந்த அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல் ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தேவையில்லாமல் ஆய்வு செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. அதிகாரிகளும் அரசின் அனுமதி இல்லாமல் ஆய்வுக்கு உட்பட கூடாது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications