கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? கடும் எதிர்ப்பு தெரிவித்த ED- விசாரணையை ஒத்திவைத்த கோர்ட்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் தரப்பு இடையே பரபரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், மனு மீதான விசாரணையை வரும் மே 9-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத்துரை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன. கெஜ்ரிவாலின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
இதன்படி, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறியது.
ஜாமீனில் வெளியே வந்தாலும் அரசு கோப்புகளில் எதுவும் கையெழுத்திட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் தரப்பு இடையே பரபரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், மனு மீதான விசாரணையை வரும் மே 9-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. இதற்கிடையே, கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வரும் 20 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐசிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications