சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக.. அரவிந்த் கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ-ன் கைது நடவடிக்கைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதேபோல சிபிஐ-யும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, அங்கேயே வைத்து அதிரடியாக கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் வெளியே வருவதில் தொடர் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 26ம்தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமனறத்தில் ஆஜராகி சிபிஐ-ன் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் மறுபு்பு தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் சிபிஐ தரப்பில், கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட இருக்கிறது. அதேபோல, கெஜ்ரிவால் தரப்பில், "சிபிஐ வசம் உரிய ஆதாரங்கள் இல்லை" என்று வாதிடப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications