வருமான வரி சட்டமே மாறுகிறது.. நிர்மலா சீதாராமன் அறிவித்தபடியே.. மறுஆய்வு செய்ய குழு அமைப்பு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தபடி, வருமானவரி சட்டத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தேவையற்ற உட்பிரிவுகளை நீக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானவரி சட்டத்தில் 298 பிரிவுகளும், 23 அத்தியாயங்களும் இருக்கும் நிலையில், அதில் தேவையற்ற உட்பிரிவுகளை அடையாளம் கண்டு நீக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வருமானவரி சட்டம், விரிவாக மறுஆய்வு செய்யப்படும் என்றும் அப்போது அறிவித்தார்.

1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டம் மற்றும் 1962ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி விதிகள் சட்டங்கள், இந்தியாவில் வருமான வரி விதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு விரிவான சட்டமாகும். தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதற்கும் இந்த சட்டங்கள் செயல்படுகிறது. இதுதவிர வருமான வரிச் சட்டம் 2018-2019 நிதியாண்டிற்கான குறிப்பிட்ட வரி விகிதங்கள், கூடுதல் கட்டணம் மற்றும் கல்வி செஸ் ஆகியவை பரிந்துரை செய்யப்படுகினற்ன.
வருமானவரி சட்டத்தில் மொத்தம் 298 பிரிவுகளும், 23 அத்தியாயங்களும் இருக்கின்றன. இதில் பல்வேறு விதிகள் நடைமுறையில் சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமானவரி சட்டம், விரிவாக மறுஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
சட்டத்தை எளிதானதாகவும், புரிந்து கொள்ளத்தக்கதாகவும் மாற்றுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதன்மூலம் வருமான வரி தொடர்பான வழக்குகள் குறையும் என்றும், மறுஆய்வு பணி 6 மாதங்களில் முடிவடையும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தபடி வருமானவரி சட்டத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாடு முழுவதும் தகுதிவாய்ந்த வருமானவரி அதிகாரிகள், குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பணியை தொடங்கி விட்டனர். எந்தெந்த வகையில் சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
உலக அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்து, அவற்றை சேர்ப்பது பற்றி முடிவு செய்வார்கள். தேவையற்ற உட்பிரிவுகளை அடையாளம் கண்டு நீக்குவார்கள். வருமானவரித்துறையின் நோட்டீஸ் மற்றும் கடிதங்களில் எளிமையான வார்த்தைகள் பின்பற்றப்படும். அதன்மூலம் அதிகம்பேர் வருமானவரி சட்டத்துக்கு உடன்படுவார்கள். வருமானவரித்துறையில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காண இன்னும் 15 நாட்களில் அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications