ராஜஸ்தான், மபி, சத்தீஸ்கரில் ஆட்சியை அமைக்கும் பாஜக.! தெலுங்கானாவில் மட்டும் காங்கிரசுக்கு ஆறுதல்
டெல்லி: தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்கிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக கடைசி சட்டசபைத் தேர்தல்கள் இதுவாகும். லோக்சபா தேர்தலுக்கான களத்தை இது நிச்சயம் நிர்ணயம் செய்யும் என்பதால் இது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிச. 2023 முதல் ஜன. 2024 வரையிலான காலத்தில் இந்த 5 மாிநல சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்தது. கடந்த நவ. 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.
கடும் போட்டி: இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று நாளை வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த 4 மாநிலங்களில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதன் பிறகு இப்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது.. இங்கே எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறக் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கே காங்கிரஸ் கட்சியின் வசம் 64 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மஜ்லீஸ் கட்சி 7 இடங்கள், பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன.
மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் 230 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க 116 சீட்கள் தேவை.. அங்கே பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், அவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 163 இடங்கள் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
ராஜஸ்தான்: அடுத்து ராஜஸ்தானைப் பொறுத்தவரை அங்கேயும் காங்கிரஸ் பாஜக இடையே தான் போட்டி... அங்கே 200 இடங்களில் குறைந்தது 101 இடங்களில் வெல்லும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். இங்கே பாஜக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற்றுள்ளது. அங்கே பாஜகவுக்கு 115 இடங்களும் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 8 பேர் வென்றுள்ளனர். பிற கட்சிகள் மொத்தம் 7 இடங்களில் வென்றுள்ளன.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்திலும் கூட காங்கிரஸ், பாஜக இடையே தான் கடும் போட்டி.. சத்தீஸ்கரில் 90 சீட்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் வேண்டும். முதலில் அங்கே காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், பின்னரே அப்படியே ஆட்டம் மாறியது. அங்கேயும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அங்கே பாஜகவுக்கு 54 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications