கொரோனா தடுப்பூசி அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.. பிரிட்டன் நிறுவனம் விளக்கம்! என்ன நடந்தது
டெல்லி: பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாகச் சிலருக்கு ஓரிரு பக்க விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2019இல் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், சில அரிய நிகழ்வுகளில் கொரோனா தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசி குறித்து நீதிமன்றத்தில் முக்கிய ரிப்போர்ட்டை தாக்கல் செய்துள்ளது.
வழக்கு: அதாவது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக அந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் தான் தங்கள் தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தான் தடுப்பூசியை உருவாக்கி இருந்தது. இதையே தான் இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்திருந்தது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது. இந்தச் சூழலில் தான் அஸ்டாரஜெனெகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
51 பேர்: 51 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்த ஜேமி ஸ்காட் என்பவர் தான் ஏப்ரல் 2021இல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் இதனால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக வழக்கு தொடர்ந்தார். இதனால் தனது வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
அரிய பக்கவிளைவுகள்: அஸ்ட்ராஜெனெகா முதலில் இந்தக் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் ஒன்றில் கோவிஷீல்ட் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. TTS (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) என்பது ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படும். மேலும், அவை ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையையும் குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், "எங்கள் தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு துல்லியமான காரணம் தெரியவில்லை. அதேநேரம் இந்த டிடிஎஸ் பாதிப்பு தடுப்பூசியால் தான் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இல்லை. தடுப்பூசி இல்லாமல் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே ஒவ்வொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படப் பல காரணங்கள் இருக்கலாம்" என்று கூறியுள்ளது.
அடுத்து என்ன: அஸ்ட்ராஜெனெகா அளித்துள்ள இந்த விளக்கம் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா இந்த விளக்கத்தை அளித்துள்ள நிலையில், இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications