அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா! டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றார் அதிஷி!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து இன்று புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து வரும் 26, 27 ஆகிய இரு நாட்கள் டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கிறது. இதில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிப்பார்.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறையீடு வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிபிஐயாலும் இதே வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் தனக்கு ஜாமீன் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. தலைமைச் செயலகம் செல்லக்கூடாது, அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்தது.
இதையடுத்து தான் வகித்து வந்த முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் மன்றத்தின் முன் தனது நேர்மையை நிரூபிப்பதாக கூறினார். டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் வேட்பாளராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுநரிடம் கொடுத்தார். இந்த நிலையில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை முறைப்படி நேற்று இரவு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இன்று டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா அதிஷிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் வரும் 26 மற்றும் 27 ஆகிய நாட்கள் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. இதேபோன்று அன்றைய தினம் அதிஷி சிறப்புரையாற்ற இருக்கிறார். டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 61 தொகுதிகள் ஆம் ஆத்மி வசமே உள்ளன. எனவே ஆம் ஆத்மிக்கு முழு பெரும்பான்மை இருப்பதனால் எளிதில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications