நாடாளுமன்றத்தில் 20 நிமிஷம் ஆடியோ மியூட்..காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு..பாஜக அளித்த விளக்கம் இதுதான்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிய போது ஆடியோ மியூட் செய்யப்பட்டதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பிய போது ஆடியோ மியூட் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் விதமாக மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதாகவும் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டிற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. ராகுல்காந்தியின் லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கக்கோரி ஆளும் கட்சி எம்.பிக்களும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

நீதித்துறை ஒடுக்கப்படுவதாக..
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது பாரத் ஜடோ யாத்திரையை முடித்துக் கொண்டு லண்டன் சென்றிருந்தார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அப்போது இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாகச் சாடியிருந்தார். இது தவிர பல்வேறு கருத்துகளை அவர் லண்டனில் கூறியிருந்தார்.

திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு
இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. இந்த விவகாரத்தை வைத்து ஆளும் பாஜக எம்.பிக்களும், அதானி விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நாடாளுமன்றம் முதல் நாளில் இருந்தே முடங்கி வருகிறது. இன்று அவை கூடியதும் கடும் அமளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் விதமாக
இதனிடையே, அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆடியோ மியூட் செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அரசுக்கு எதிராக கோஷம் போடும் போது ஆடியோ எதுவும் இல்லாமல் உள்ளது. கிட்டதட்ட 20 நிமிடங்கள் வரை இதே நிலை நீடித்தது. பிறகு சபாநாயகர் ஓம் பிர்லா பேசத்தொடங்கிய போதுதான் ஆடியோ கேட்கத் தொடங்குகிறது.

திட்டமிட்டு இவ்வாறு நடக்கவில்லை
இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி, ராகுல் பேச அனுமதிக்க வேண்டும்.. என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா அப்போது சிரித்தார். அவை அமைதியாகவிட்டது.. இதுதான் ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. எனினும், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டு இவ்வாறு நடக்கவில்லை என்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே ஆடியோ மியூட் ஆகிவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications