இதுதான் இங்க விஷயமே.. தேர்தல் களத்தை மொத்தமாக மாற்றும் "ராமர் கோயில்!" மோடிக்கு ஆதரவு ரொம்பவே அதிகம்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கடந்த பிப். மாதம் திறக்கப்பட்ட நிலையில், இந்த ராமர் கோயில் லோக்சபா தேர்தலில் கணிசமாகப் பலன் தரும் என்று புதிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், சமீபத்தில் ஜீ தொலைக்காட்சி நடத்திய சர்வே முடிவுகள் வெளியானது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 390 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறியிருந்தது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 96 இடங்களிலும் மற்ற கட்சிகள் 57 இடங்களிலும் வெல்லும் எனக் கூறியிருந்தது. அதாவது பிரதமர் மோடி மிக பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த சர்வேயில் மேலும் சில முக்கியமான கேள்வி பதில்கள் இடம்பெற்றுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.
சர்வே: பிரதமர் நரேந்திர மோடி செல்வாக்குடன் இருக்க என்ன காரணம் என்று கேள்விக்கு, 41% மக்கள் பிரதமர் மோடி மக்கள் நலத் திட்டங்கள் எனத் தெரிவித்துள்ளன. 22% பேர் மோடியின் கறைபடியாத இமேஜ் அதற்குக் காரணம் எனச் சொல்லியுள்ளனர். மேலும், 18% மக்கள் ராமர் கோவில் கட்டியது என கூறியுள்ள நிலையில், தேசியவாதம் என்று 12% மக்கள் கூறியுள்ளனர். இவை போக வேறு காரணங்கள் இருப்பதாக 7% பேர் கூறியுள்ளனர்.
இதுதான் விஷயமே: ராமர் கோயிலால் பாஜக பலன் அடையுமா என்ற கேள்விக்கு 56% மக்கள் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவுக்கு நன்மை பாஜகவுக்குக் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், 26% பேர் குறைந்த அளவு பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மேலும், 9% மக்கள் ராமர் கோயிலால் பலன் இல்லை என்றும் 5% மக்கள் இதனால் பாஜகவுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். 4% மக்கள் இது குறித்து தங்களுக்கு ஐடியா இல்லை என கூறியிருக்கிறார்கள்.
அதாவது இந்த சர்வேயை வைத்துப் பார்த்தால் 56% மக்கள் அதிக பலன் 26% ஏதோ பலன் என்று சுமார் 75% பேர் அயோத்தி ராமர் கோயிலால் பாஜக பலனடையவே செய்யும் எனத் தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் என்பது வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் மிகப் பெரியளவிலும் இந்துக்கள் மத்தியில் கணிசமாகவும் ராமர் கோயில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அயோத்தி ராமர் கோயில்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் இந்த இடத்தை கருதும் நிலையில், அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது வலதுசாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த அயோத்தி ராமர் கோயிலின் ராமர் பிரதிஷ்டை நிகழ்வு கடந்த பிப். மாதம் நடைபெற்றது. அயோத்தியில் உள்ள அந்த கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட்டது. இந்த பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போதே கூட பல்வேறு எதிர்க்கட்சிகளும் அயோத்தி ராமர் கோயிலை அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவதாகச் சாடினர். ராமர் கோயில் கட்டுமானம் முடிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாகத் தேர்தலை மனதில் வைத்து ராமர் கோயில் திறக்கப்படுவதாக விமர்சித்தன. இந்த சர்வே வைத்துப் பார்க்கும் போது ராமர் கோயில் என்பது பாஜகவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது உறுதியாகிறது.
பிரதமர் வேட்பாளர்: இது தவிர இப்போது தேர்தல் நடந்தால் எது பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று கேள்விக்குப் பொதுமக்கள் அளித்த பதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. சுமார் 56% மக்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தங்களுக்கு முக்கியம் என்கிறார்கள். 17% மக்கள் மத்திய அரசின் திட்டங்கள் என்று கூறியுள்ள நிலையில், 8% மக்கள் வேலையின்மை என்றும் 7% மக்கள் தங்கள் எம்.பியின் செயல்பாடு என்றும் கூறியுள்ளனர். இவை தவிர 4% பொதுமக்கள் பணவீக்கம் என்றும் 8% பேர் மற்ற காரணங்களையும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications