4 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வருகை தந்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா- உற்சாக வரவேற்பு
டெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
வங்கதேச பிதமர் ஷேக் ஹசீனாவின் 4 நாட்கள் இந்திய பயணம் தொடங்கி உள்ளது. வங்கதேச அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக பிரநிதிகள் குழுவும் இந்தியா வருகை தந்துள்ளது.

டெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்றார்.
டெல்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஷேக் ஹசீனா, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிரார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஷேக் ஹசீனா சந்தித்து பேசுகிறார். கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் இருநாட்டு பிரதமர்களும் 13-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு, வர்த்தகம், நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்சனை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணத்தின் போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியிலும் ஷேக் ஹசீனா பங்கேற்க உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்கும் ஷேக் ஹசீனா செல்ல இருக்கிறார்.
முன்னதாக இந்திய பயணம் தொடர்பாக ஷேக் ஹசீனா அளித்திருந்த பேட்டியில் கொரோனா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி பெரும் உதவிகளை செய்தது. வங்கதேசத்துக்கு மட்டுமன்றி அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கினார் பிரதமர் மோடி. இந்தியா-வங்கதேசம் இருநாடுகள் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது. உக்ரைன் -ரஷ்யா யுத்தத்தின் போது வங்கதேச மாணவர்களையும் இந்தியா மீட்டுக் கொடுத்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். வங்கதேசம் மதச்சார்பற்ற நாடு. நாங்கள் மத நல்லிணக்கத்தை செயல்படுத்துகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications
