கடற்கொள்ளையர்களை பார்த்ததும் மிரண்ட வங்கதேச கப்பல்.. தக்க நேரத்தில் உதவிய இந்தியா! நடுக்கடலில் பகீர்
டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்த வர்த்தக கப்பல் ஒன்றைக் கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில், அவர்களுக்குத் தக்க நேரத்தில் உள்ளே சென்று இந்தியா உதவி இருக்கிறது.
சர்வதேச அளவில் தொடர்ச்சியாக நடக்கும் வர்த்தகம் தொடர்ச்சியாக எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நடக்கும் கப்பல் போக்குவரத்து ரொம்பவே முக்கியமானது. கப்பல் மூலம் அதிகபட்ச அளவிலான சரக்குகளைக் குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும் என்பதே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும் இதுபோல வணிக கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் கடத்துவதும் அவ்வப்போது நடக்கும். இப்போது அப்படி வணிக கப்பல் ஒன்று கடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பலுக்கு இந்தியா சரியான நேரத்தில் உதவி இருக்கிறது.
கடற்கொள்ளையர்கள்: இந்த வாரத் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே சோமாலியா கடற்கரையில் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த கப்பல் உதவி கோரியிருந்த நிலையில், அதற்கு இந்தியா உதவியதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
சுமார் 55,000 டன் நிலக்கரியுடன் மொசாம்பிக் தலைநகர் மபுடோவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு எம்.வி.அப்துல்லா என்ற கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் அந்தக் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் உதவும்படி அந்தக் கப்பல் SOS கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியக் கடற்படை: இது குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த எஸ்ஓஎஸ் மெசேஜ் கிடைத்ததும் நீண்ட தூரக் கடல் ரோந்து விமானம் உடனடியாக அனுப்பப்பட்டது.. கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலை அந்தக் கப்பல் எங்கே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது, கப்பலில் இருக்கும் பணியாளர்களின் நிலையை அறிய அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றோம். இருப்பினும், அதற்குப் பதில் இல்லை.
இதையடுத்து போர்க்கப்பல் களமிறக்கப்பட்டது. கடந்த மார்ச் 14ஆம் தேதி காலை அந்தக் கப்பலை அடைந்தோம். ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.. சோமாலியாவின் பிராந்திய கடற்பகுதிக்கு அந்தக் கப்பல் செல்லும் வரை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் பாதுகாப்பிற்கு உடன் சென்றது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
15-20 பேர் கொண்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் தங்கள் கப்பலைக் கடத்திச் சென்றதாகவும் இந்தியக் கடற்படை தங்களுக்குத் தக்க நேரத்தில் உதவியதாகவும் எம்.வி. அப்துல்லா கப்பலின் உரிமையாளரான மெஹருல் கரீம் கூறினார். இந்தியா சரியான நேரத்தில் உதவியதால் மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
சோமாலியா கடற்கொள்ளை: பல ஆண்டுகளாகச் சோமாலியா கடற்கொள்ளை சம்பவங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் மாதம் முதல் சோமாலியா அருகே மீண்டும் கடற்கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் கடற்கொள்ளையர்கள் என்றால் மற்றொரு பக்கம் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவது மற்றொரு பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இதனால் வணிக கப்பல்கள் அதிக எரிபொருள் செலவை ஏற்படுத்தும் ரூட்களில் சுற்றிச் செல்லும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இங்கே பயணிக்கும் வணிக கப்பல்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் இங்கே திசைதிருப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications