இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு பார் கவுன்சில் அதிரடி அனுமதி
இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களில் பணி செய்வதற்கு பார் கவுன்சில் அதிரடியாக அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை அனுமதிக்கவே கூடாது என்பது பார்கவுன்சிலின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் 2007-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன. 2012-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் பார் கவுன்சில் ஆப் இந்தியா, மாநிலங்களின் பார் கவுன்சில் அமைப்புகள் ஆகியவற்றுடன் பல்வேறு விவாதங்களையும் நடத்தியிருந்தது. இதனடிப்படையில் தற்போது வெளிநாட்டு வழக்கறிஞர்கள், இந்தியாவில் சட்டப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பார் கவுன்சில் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், வெளிநாட்டை சேர்ந்த வழக்கறிஞர், சட்ட நிறுவனம் கண்டிப்பாக பார் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் பதிவு செய்திருக்க வேண்டும். பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்யாத வெளிநாட்டு வழக்கறிஞர், சட்ட நிறுவனம் இந்தியாவில் சட்டப் பணிகள் செய்ய முடியாது.

இந்தியாவில் சட்ட பணிகள் செய்ய வெளிநாட்டு வழக்கறிஞர்கள் $25,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்; வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் $50,000 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இத்தகைய பதிவுக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள், தேவையான ஆவணங்கள் விவரங்களையும் பார் கவுன்சில் ஆப் இந்தியா விரிவாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நீதிமன்றம், தீர்ப்பாயம் உள்ளிட்டவைகளில் நேரடியாக ஆஜராக முடியாது. இவற்றில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்க மட்டும் அனுமதி உண்டு என்பது உள்ளிட்டவை அந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications