"அன்பின் உச்சம்.." கேன்சர் வந்த பெண்ணுக்கு மொட்டை அடிக்கும் போது.. சலூன் கடைக்காரர் செய்த காரியம்
டெல்லி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடிக்கும் போது முடி திருத்துபவர் செய்த நெகிழ்ச்சி செயலானது காண்பவர்களைக் கண் கலங்கவும், நெகிழவும் செய்துள்ளது.
அன்பிற்கு மேல் இந்த உலகத்தில் பெரியது எதுவும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.
அந்த சலூன் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.

புற்றுநோய் வேதனைகள்
பொதுவாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய வலிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் ஒருவரின் உலகை அப்படியே புரட்டிப்போடக் கூடிய தன்மை புற்றுநோய்க்கு உண்டு. அதைவிட முக்கியமாக, புற்றுநோய் வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்களுக்குக் கொத்து கொத்தாக முடிகொட்டும்.

மொட்டை அடிக்கும் நோயாளிகள்
கீமோதெரபி சிகிச்சையில் முடியும் கொட்டும் என்பதால் அவர்கள் தங்கள் முடியை மொட்டை அடித்துக் கொள்வார்கள். உணர்வு ரீதியான இந்த வலியைக் கடப்பது சற்று கடினமானது என்பதால், அந்த சமயத்தில் அவர்களுக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படியொரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேம்பி அழுத பெண்
அந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதுதான் என்றாலும், எந்தப் பகுதி என்று தெளிவாகத் தெரியவில்லை. சிசிடிவி கேமராவில் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தலை முடியை எடுப்பதற்காக சலூன் கடைக்கு வருகிறார். சலூன் கடைக்காரர் முடியை மழிக்கும் போது அப்பெண்ணால் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித் தேம்பி அழுகிறார்.

நெகிழ்ச்சி செயல்
இந்நிலையில், அவரது முடியை முழுவதுமாக மொட்டை அடித்த சலூன் கடைக்காரர் அப்பெண்ணின் கழுத்தில் கைபோட்டவாறு ஆதரவாகக் கட்டி அணைக்கிறார். அந்த பெண்ணும் அவரது கையை பிடித்துக் கொள்கிறார். பின்னர், அந்த சலூன் கடைக்காரர் தான் வைத்திருந்த டிரிம்மரால் அப்படியே தனது தலையை மொட்டை அடிக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரை தடுக்க முயல்கிறார். ஆனால், அவரோ தனது தலையை முழுவதுமாக மொட்டை அடித்து தனது அன்பை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications