பாரத மாதா என்பது ஒரே மதம், ஒரே கலாச்சாரம் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் குரல்: ராகுல் காந்தி உருக்கம்!
டெல்லி: "பாரத மாதா என்பது வெறும் நிலம் அல்ல. ஒரே எண்ணங்களின் தொகுப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட கலாசாரம் அல்லது ஒரே மதம் அல்ல. அது ஒவ்வொரு இந்தியனின் குரல்" எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ராகுல் காந்தி.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த ஆண்டு நான் 145 நாட்கள் யாத்திரை மேற்கொண்டேன். எதற்காக இந்த நடைபயணத்தை நீங்கள் மேற்கொண்டீர்கள்? இந்த பயணத்தில் எதை நீங்கள் பெற்றீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். கடலின் ஓரத்தில் தொடங்கி வெப்பம், தூசி, மழை வழியாக நடந்தேன். காடுகள், நகரங்கள் மற்றும் மலைகள் வழியாக மென்மையான பனி விழும் காஷ்மீரை அடைந்தேன்.
நடைபயணத்தை தொடங்கும்போது மிக எளிதாக இருக்கும் என்று நினைத்துத்தான் தொடங்கினேன். ஆனால் சில நாட்களில் எனது முழங்காலில் நீண்ட நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானது. சில நாட்கள் நடைபயணத்தில் என் பிசியோதெரபிஸ்டும் எங்களுடன் வந்தார். ஆனால் வலி அப்படியே இருந்தது. ஒவ்வொரு முறை யாத்திரையை நிறுத்துவதை பற்றி நினைக்கும்போதும் யாரோ ஒருவர் வந்து, இந்த யாத்திரை தொடர எனக்கு ஆற்றலை பரிசளித்தார்கள்.
Bharat Mata is the voice of every Indian 🇮🇳 pic.twitter.com/7w1l7VJaEL
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
வலி தொடர்ந்து இருந்தாலும் அந்தக் குரல்களே எனக்கு முன்னோக்கிச் செல்ல புதிய ஊக்கத்தை கொடுத்தன. அவர்களை நான் கவனிக்கத் தொடங்கினேன். குழந்தைகள், தாய்மார்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் என்னிடம் வந்து பேசினார்கள். அன்பின் அர்த்தத்தை வெளிப்படுத்தினார்கள். தெருக்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் குளிரில் நடுங்குவதைப் பார்த்த பிறகு, வெறும் டி-சர்ட் அணிந்து கொண்டு எனது முழு நடைபயணத்தையும் தொடர்வது என முடிவு செய்தேன்.
என் அன்பிற்குரிய பாரத மாதா என்பது வெறும் நிலம் அல்ல. ஒரே எண்ணங்களின் தொகுப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட கலாசாரம், ஒரே வரலாறு அல்லது ஒரே மதம் அல்ல. ஒரே சாதியும் அல்ல. எவ்வளவு பலவீனமானாலும் சரி, வலிமையானாலும் அது ஒவ்வொரு இந்தியனின் குரல். எல்லா குரல்களிலும் ஆழமாக மறைந்திருந்த மகிழ்ச்சியும், பயமும், வேதனையும், வலியும் தான் இந்தியா." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications