சண்டிகரில் ஆம் ஆத்மிக்கு பெரும் அதிர்ச்சி.. பாஜகவுக்கு தாவிய 3 கவுன்சிலர்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்
டெல்லி: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மேயர் பதவியில் இருந்து பாஜகவின் மனோஜ் சோன்கர் விலகினார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் திடீர் திருப்பமாக பாஜகவுக்கு தாவியுள்ளனர்.
சண்டிகர் மாநகராட்சியில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்தது. இதில் "இந்தியா" கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இதில் தேர்தலுக்கு முன்பு "இந்தியா" கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால் அவரே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன.
இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான சாடின.
இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சண்டிகர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி நடந்து கொண்ட விதத்தை கடுமையாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே சண்டிகர் மேயர் பொறுப்பில் இருந்து பாஜகவின் மனோஜ் சோன்கர் விலகினார். இந்த பரபரப்பு திருப்பங்களுக்கு இடையே ஆம் ஆத்மி கட்சியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர். பிரதமர் மோடியின் பணிகளை பார்த்து ஈர்க்கப்பட்டதாக கட்சி தாவிய மூன்று கவுன்சிலர்களும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மறு தேர்தல் நடந்தால் பாஜக பெரும்பான்மையை எட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கவுன்சிலர்களான பூனம் தேவி, நேஹா, முசாவத் மற்றும் குர்ஷரம் கலா ஆகிய 3 பேரும் பாஜக தெசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications