தீராத பிடிவாதம்.. ‛இந்தியா’ கூட்டணி தலைவர் பதவியை ஏற்க மறுத்த நிதிஷ் குமார்! புதிதாக வைத்த கோரிக்கை
டெல்லி: ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஒருங்கிணைப்பாளர் பதவியை பெற துடித்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்றைய கூட்டத்தில் வைத்த கோரிக்கை என்பது அவர் இன்னும் அதிருப்தியில் இருப்பதை காட்டும் வகையில் உள்ளதால் ‛இந்தியா' கூட்டணி தலைவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 4 ஆலோசனை கூட்டங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. இதில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், தலைவர், ஒருங்கிணைப்பாளர் என யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த பொறுப்புகளில் தலைவர்களை நியமனம் செய்வதில் பெரும் குளறுபடி நிலவியது. இதனால் தொடர்ந்து இந்த தேர்வு என்பது ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த முறை டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ‛‛இந்தியா'' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரிந்துரைத்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பாத நிலையில் மல்லிகார்ஜுன கார்கே அதனை மறுத்தார். முதலில் தேர்தலில் வெற்றி பெறுவோம் அதன்பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என அவர் கூறினார். இருப்பினும் மம்தா பானர்ஜியின் இந்த செயலால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் அதிருப்தியடைந்தார். ‛இந்தியா' கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ் குமார் தன்னை பிரதமர் வேட்பாளராகவும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்வார்கள் என நினைத்தார். ஆனால் அது நடக்காததால் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார்.
மேலும் அந்த கூட்டத்திலேயே ஹிந்தியில் மொழிப்பெயர்க்ககூறிய திமுக எம்பி டிஆர் பாலு கூறிய நிலையில் அவர் கடிந்து கொண்டார். முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறி கோபத்தை கொப்பளித்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ‛இந்தியா' கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட சிலர் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அது வெளியாக உள்ளது. இதற்கிடையே தான் இந்த கூட்டத்தில் நடந்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நிதிஷ் குமார் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை சமாதானம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து ‛இந்தியா' கூட்டணியின் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி நிதிஷ் குமாரிடம் கோரப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். மேலும் தலைவர் பொறுப்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரிடம் வழங்க வேண்டும் என அவர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து தலைவருக்கு அடுத்தப்படியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்கும்படி நிதிஷ் குமாரிடம் கூறப்பட்டது.
ஆனால் அவர் அதனையும் ஏற்க மறுத்துவிட்டார். கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்பேன். இல்லாவிட்டால் அந்த பொறுப்பும் எனக்கு வேண்டாம். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை செய்த பிறகு பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். கடந்த முறை நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமாரை மம்தா பானர்ஜி புறம்தள்ளிய நிலையில் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதாகவும், இதனால் தான் இந்த முறையும் அவர் தலைவர், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications