பீகார் தேர்தல்: நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர்.. மோடி பதவியை காப்பாற்ற சரணாகதி அடைந்த பாஜக!
டெல்லி: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மற்றும் பிரதமர் மோடியின் பதவியை தக்க வைக்க பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியூ) தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதிஷ்குமார் தான் முதல்வர் வேட்பாளர் என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஜேடியூ மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ- பாஜக கூட்டணியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் தேர்தலில் பாஜக பெரிய கட்சியாகவே இருந்தாலும் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை; பீகார் தேர்தலில் நிதிஷ்குமாரை முன் நிறுத்தியே பாஜக வாக்கு கேட்கும் என்றும் அக்கட்சி சரணாகதி அடைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். 2020-ம் ஆண்டு தேர்தலில் பாஜக- ஜேடியூ, விஐபி, ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா ஆகியவை இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி இடம் பெறாமல் ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது ஆனாலும் லோக் ஜனசக்திக்கு பாஜக ஆதரவை தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
2020-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 74; நிதிஷ்குமாரின் ஜேடியூ 43இடங்களை மட்டுமே பெற்றன; லாலுவின் ஆர்ஜேடி 75 ; காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 125 இடங்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மொத்தம் 110 இடங்களும் கிடைத்தன.
இதனையடுத்து நிதிஷ்குமாரை முதல்வராக கொண்டு பாஜக கூட்டணி ஆட்சி முதலில் அமைந்தது; ஆனால் திடீரென பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி- காங்கிரஸுடன் ஜேடியூ கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி அரசிலும் நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார். இதன் பின்னர் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்து மீண்டும் புதிய ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார்.
இந்த நிலையில்தான் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது; இதனால் நிதிஷ்குமார் ஜேடியூவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தாங்கி பிடிக்கும் கட்சிகளில் முக்கியமானது நிதிஷ்குமாரின் ஜேடியூதான்.
இதனால்தான் எதிர்வரும் பீகார் சட்டசபை தேர்தலில் வேறுவழியே இல்லாமல் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் இப்போது இருந்தே பாஜக ஆதரவு தெரிவித்து வருகிறது. 2020- தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ ஆதரவு இப்போது முக்கியம் என்பதால் அவரது தலைமையில்தான் பீகார் தேர்தலை சந்திப்போம் என பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இதனால் பீகார் சட்டசபை தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications