பில்கிஸ் பானு வழக்கு.. ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறுதி விசாரணை.. கறாராக உச்ச நீதிமன்றம் சொன்ன முக்கிய விஷயம்
டெல்லி: குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுதலை வழங்கிய எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் பெருங்கலவரம் வெடித்தது. அப்போது தப்பி ஓடிய 21 வயது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த பெண் முன்பாகவே அவரது குடும்பத்தினர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அவரது மூன்று வயது மகளும் இதில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிரப்பு எழுந்தது.
இதை எதிர்த்து பில்கிஸ் பானு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதவிர திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிபிஐ(எம்) தலைவர் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால், லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா உள்ளிட்ட பல பொதுநல வழக்குகள் மேலும் சிலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாக ரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒரு முறை உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் கூறும் போது " பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த தற்கான காரணத்தை குஜராத் அரசு உடனே தெரிவிக்க வேண்டும். இது கொடும் குற்றம் தொடர்பான வழக்கு என்பதால் பொதுமக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்திருக்க வேண்டும்.

இன்று பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகளின் விடுதலைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால், நாங்களே ஒரு முடிவுக்கு வருவோம்" என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுதலை வழங்கிய எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது தெரிவித்தது. விசாரணையை மேலும் ஒத்திவைக்க மாட்டோம் என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் பதில்களை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு முன்பு கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.












Click it and Unblock the Notifications