பரபரக்கும் குஜராத்.. 11 பேரின் விடுதலையை எதிர்த்து.. பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு
டெல்லி: கூட்டுப்பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மேலும், குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை மாநில அரசு தீர்மானிக்கலாம் என்று வழங்கப்பட்ட உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும் என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் பில்கிஸ் பானு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதையடுத்து மனுவை பரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
பில்கிஸ் வீடு முன் “பட்டாசு” கடை.. உரிமையாளரும் குற்றவாளி! குஜராத்தில் “ஃப்ரீயாக” சுற்றும் 11 பேர்

விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது குழந்தை கொலை கொல்லப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களை குஜராத் மாநில பாஜக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு சீராய்வு
முன்னதாக குற்றவாளிகள் 11 பேரும் தங்களது விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினர். குற்றவாளிகள் 14 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவந்த நிலையில், இது குறித்து குஜராத் மாநில அரசு ஒரு குழுவை அமைத்து இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவினர் அனைவரும் ஒருமனதாக குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று கூறினார். இதனையடுத்து 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்கு மூல காரணமாக அமைந்தது, குஜராத் அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதுதான். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீராய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கோரியுள்ளார்.

அவசர வழக்கு
நாளை குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பில்கிஸ் பானு தரப்பு வழக்கறிஞர் ஷோபா குப்தா வலியுறுத்தினார். இதனையடுத்து இந்த மனு பரிசீலிக்கப்படும் என்றும் எந்த தேதியில் மனு விசாரிக்கப்படும் என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார். அதேபோல இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் குப்தா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், விசாரணை முறையை நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்று கூறினார். குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பில்கிஸ் பானு மனு தாக்கல் செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்
முன்னதாக 11 பேர் விடுதலை செய்யப்பட்டபோது குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை எதிர்த்து சிபிஎம் கட்சியின் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, முன்னாள் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மறுபுறத்தில், இந்த விடுதலையை பாஜகவினர் கொண்டாடி தீர்த்தனர். குஜராத்தின் கோத்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ ரவுல் ஜி இது குறித்து கூறுகையில், "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்; அவர்கள் நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள். அவர்கள், தவறான நோக்கங்களால் கூட தண்டனை பெற்றிருக்கலாம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.