பிரதமர் மோடி சொல்வதை செய்வதில்லை.. விலைவாசி உயர்வு குறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு விமர்சனம்!
டெல்லி: இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தகுதி இல்லாத ஒரு கட்சி ஆட்சியில் இருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், மக்கள் மீது பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதனாலே எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வெளிநடப்பு செய்கிறோம்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்துவதற்கு திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுவது எல்லாம் விளம்பர நடவடிக்கை. மக்களுக்காக அப்படி பேசுகிறார். ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. ஆனால் பாஜக அதனை மதிப்பதில்லை. பிரதமர் மோடி சொல்வதை செய்வதில்லை. 8 ஆண்டுகளாக அவர் அளித்த ஏராளமான வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளது.
விலைவாசி உயர்வு காரணமாக ஏராளமான அதீத பிரச்னையை மக்கள் சந்தித்து வருகின்றனர். அரிசிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால், கிலோவுக்கு ரூ.2 வரை உயர வாய்ப்புகள் உருவாகியுள்ளது. மக்களின் அத்தியாசிய தேவையான தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி விதிக்க கூடாது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. பாஜக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை. அனுபவம் உள்ளவர்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் ஆலோசனை செய்யலாம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தகுதி இல்லாத ஒரு கட்சியிடம் மக்கள் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். இப்படி சென்றால் இலங்கையின் நிலை இந்தியாவுக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications