மெஜாரிட்டி கிடைச்சாச்சி.. மீண்டும் பிரதமராகும் மோடி! என்டிஏ கூட்டணி லோக்சபா குழு தலைவராக தேர்வு
டெல்லி: டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளின் லோக்சபா குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். அதோடு பிரதமர் மோடியின் பெயர் பிரதமராக முன்மொழியப்பட்டது. இதையடுத்து மோடி இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. மத்தியில் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சிக்கு 272 எம்பிக்கள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாஜக, காங்கிரஸ் உள்பட எந்த கட்சிக்கும் 272 எம்பிக்கள் கிடைக்கவில்லை.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியுவின் 12 எம்பிக்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்பிக்கள் உள்பட 14 கட்சிகளின் 53 எம்பிக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கியது.இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டணி கட்சி எம்பிக்கள் இருக்கையில் மைய மண்டப ஹாலில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில் கூட்டணி கட்சியின் பிற தலைவர்கள் மேடையில் போடப்பட்டு உள்ள இருக்கைகளில் அமர்ந்தனர். மேலும் மோடியை ஒருமனதாக மீண்டும் அவர்கள் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்துள்ளனர். அதாவது கூட்டணி கட்சிகளின் லோக்சபா குழு தலைவராக இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். இதன்மூலம் அதனை மற்றவர்கள் வழிமொழிந்தனர். இதன்மூலம் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மோடி ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க உரிமை கோருகிறார். லோக்சபாவில் தனக்கு உள்ள ஆதரவு எம்பிக்களின் பட்டியலை அவரிடம் வழங்கி மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். அதன்பிறகு மீண்டும் பிரதமராக மோடி நாளை மறுநாள் (ஜுன் 9) பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications