டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி என பாஜக குற்றச்சாட்டு! குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட திட்டம்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முறையிட உள்ளனர்.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியிருந்தாலும், சிபிஐ வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே கெஜ்ரிவால் இன்றும் சிறையில் இருக்கிறார்.
கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், டெல்லியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும், நிர்வாக கட்டமைப்புகள் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், இதனால் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் முறையிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications