எதிர்க்கட்சியினர் நிறைய கேள்வி கேட்கிறார்கள்.. சஸ்பெண்ட் செய்தது சரி.. பாஜக எம்பி ஹேமமாலினி கருத்து
டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் நிறைய கேள்விகளை எழுப்பி வருவதால் அவர்களை இடைநீக்கம் செய்த நடவடிக்கை சரிதான் என பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் கலர் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு மைசூரு பாஜக எம்.பி. பார்வையாளர் மாடத்துக்கான டிக்கெட் வழங்கியது சர்ச்சைக்கு உள்ளானது. இது தொடர்பாக அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு விளக்கமளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அடுத்தடுத்து எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து மொத்தமாக 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சி எம்பிக்களில் மூன்றில் 2 பங்கு எம்பிக்கள் இல்லாமல் நடந்து வருகிறது.
இதனை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். போராட்டங்களும் அறிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அதிகளவில் கேள்வி எழுப்பி வருவதாகவும், அவர்களை இடைநீக்கம் செய்த நடவடிக்கை சரிதான் என தெரிவித்து உள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் பேசியதாவது, "அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்கள் என்றால், அவர்கள் ஏதாவது தவறு செய்து இருப்பார்கள். நாடாளுமன்ற விதிமுறைகளின் அடிப்படையிலேயே வேலை செய்ய வேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை. எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் எந்த தவறும் இல்லை. சரியான நடவடிக்கைதான். அவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.
அவர்கள் விநோதமாக நடந்துகொள்கிறார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் நாடாளுமன்ற பணிகளுக்கு இடையூறு செய்வது, மோடி அரசை கலைப்பதும்தான்.அதற்காக அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அதில் வெற்றிபெற மாட்டார்கள்." என்று தெரிவித்த அவர், டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி கூட்டத்தை சுட்டிக்காட்டி பேசினார்.












Click it and Unblock the Notifications