மன்மோகன் சிங்கின் இறப்பை வைத்து மலிவான அரசியல்.. நினைவிட விவகாரத்தில் பாஜக பதில்
டெல்லி: நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அரசு அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஒட்டுமொத்த தேசமும் இரங்கல் தெரிவிக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி இந்த துயரத் தருணத்தை தங்களது அரசியலை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது என்று கண்டித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டிருந்த பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை டெல்லி நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் மத்திய அரசு அவரை முற்றிலும் அவமதித்திருக்கிறது. அவர் இந்தியாவிற்கு 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியிருக்கிறது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக இருக்கிறது.

இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினார்கள். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர் ஆவார். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலர் மன்மோகன் சிங்கிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இறுதி சடங்கிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, "முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் பிரதமரின் இறப்பில் கூட அரசியல் விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
மன்மோகன் சிங் உயிருடன் இருந்த போதும் அவர் பிரதமர் பதவியை வகித்த போதும் காங்கிரஸ் கட்சி ஒருநாளும் அவரை மதித்தது இல்லை. அவரை விட அதிக வலிமை நிறைந்தவராக சோனியா காந்தியை முன்னிறுத்தி அதன் மூலம் மன்மோகன் சிங் அவர்களை அவமதித்த கட்சி தான் காங்கிரஸ் கட்சி. அவசர சட்ட நகலை கிழித்தெறிந்து ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அப்போதே அவமதித்து இருக்கிறார்.
ராகுல் காந்தி குடும்பம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேசத்தின் எந்தத் தலைவருக்கும் மரியாதையோ நீதியோ வழங்கவில்லை. கொள்கையற்ற காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பாவங்களை தேசம் ஒருபோதும் மறக்காது, மன்னிக்காது. பாபாசாகிப் அம்பேத்கர் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ,சர்தார் வல்லபாய் பட்டேல், பி வி நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி ஆகியோர் வரிசையில் தற்போது டாக்டர் மன்மோகன் சிங்கையும் அவமரியாதை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்காத நிலையில், இபோது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications